Published : 02 Oct 2024 06:28 PM
Last Updated : 02 Oct 2024 06:28 PM

“என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி” - கோவி.செழியன் நெகிழ்ச்சி

திருச்சி விமான நிலையத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருச்சி: “புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார். தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்,” என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறியுள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட கோவி. செழியன் இன்று (அக்.2) தனது சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே எல்லா துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழக முதல்வர் ஓய்வறியா உழைப்பாளியாக உழைத்து வருகிறார். உயர் கல்வியில் இந்தியாவில் ஏற்கெனவே முதல் இடத்தில் இருக்கும் தமிழகம் இன்னும் மேன்மையுற மேல்நிலைக் கல்வியிலும், உயர் கல்வியிலும் புதிய புதிய பாடத்திடங்களை இணைத்து உலகளாவிய கல்வி தரத்தை வழங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை முதல்வர் செய்து வருகிறார்.

புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வித் துறையை இன்னும் மேம்படுத்த, இன்னும் பிரகாசமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை முதல்வர் அந்த துறைக்கு அமைச்சராக நியமித்து இருக்கிறார்.எல்லோருக்கும் எல்லாம் என்கிற தத்துவம் தான் திராவிட மாடலின் அடிநாதம். அந்த அடிப்படையில் புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக முதல்வர் நியமித்துள்ளார்.

அந்த உள்ளத்துக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இந்தியாவுக்கே ரோல் மாடலாக திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். முன்னேற்றப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்லும் துணை முதலமைச்சர் வழிக்காட்டல் படி என்னுடைய பணியை அமைத்துக் கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x