Last Updated : 02 Oct, 2024 05:23 PM

 

Published : 02 Oct 2024 05:23 PM
Last Updated : 02 Oct 2024 05:23 PM

“துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம்; துணை முதல்வரை நியமிப்பதில் அவசரம்” - தமிழிசை சாடல்

சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை: “தமிழகத்தில் டீன்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம் காட்டுகிறார்கள். ஆனால், துணை முதல்வரை நியமிப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள்.” என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.

முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், காமராஜர் நினைவிடத்திலும் இன்று (அக்.2) மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜகவை பொறுத்தவரை தலைவர்களில் வேறுபாடு கிடையாது. மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்துகிறது. சிறுத்தையாக ஆரம்பித்து விசிக சிறுத்துப் போய் கொண்டிருக்கிறது. தற்போது, மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியிருக்கிறது. மது ஒழிப்பு மாநாட்டுக்கு விசிக கட்சியிலேயே ஆதரவு இல்லை. இதுதான் விசிகவின் கொள்கை. மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார். ஒருவேளை அவருக்கு குற்ற உணர்வு குறுகுறுக்கிறதா என்பது தெரியவில்லை.

மது ஒழிப்பு மகாத்மா காந்தியின் கொள்கை. அதை நடைமுறைப் படுத்தமுடியவில்லை என்பதால், அந்த தோல்வியை ஒப்புக்கொண்டு, காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் திருமாவளவன் சென்றிருக்கலாம். தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளில் 11 கல்லூரிகளில் டீன் இல்லை. பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கிடையாது. துணை வேந்தர்கள் நியமிப்பதில் அவசரம் காட்டவில்லை. ஆனால், துணை முதல்வரை நியமிப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள்.

அதேபோல, சிறையில் இருந்து வந்தவருக்கு எந்த ஆலோசனையும் இல்லாமல், அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டார்கள். அமைச்சர் ரகுபதி, முதல்வர் ஸ்டாலினை மூலவர் என்றும், உதயநிதியை உற்சவர் என்றும் கூறியிருக்கிறார். என்னை பொறுத்தவரை தமிழகத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும் மூலமாக இருப்பவர் தான் மூலவர். தனக்கு துணை முதல்வர் பதவி கிடைத்துவிட்டது என உற்சாகமாக இருப்பவர் உற்சவர். கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்றாலும், இதுபோல உதாரணத்துக்கு கடவுள்களை காண்பிக்கிறார்கள்.

முதலில் தமிழகத்தில் மது விலக்கை தமிழக அரசு அறிவிக்கட்டும். அதன் பிறகு நான் மத்திய அரசிடம் நாடு முழுவதும் மது விலக்கு அமல்படுத்த நாங்கள் வலியுறுத்துகிறோம். படிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டு வந்தால் திமுகவினர் ஏற்கமாட்டார்கள். அப்படியிருக்க, குடிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டு வந்தால் ஏற்றுக் கொள்வார்களா?

தமிழகத்தில் ஓர் அரசியல் கட்சி தலைவரைக்கூட சுலபமாக கொலை செய்துவிட கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வாங்குவதற்கு போராட வேண்டியிருக்கிறது. மக்களவைத் தேர்தலை விட சட்டப்பேரவை தேர்தலில் அதிக கட்சிகளுடன் சேர்ந்து பலமான கூட்டணியை பாஜக அமைக்கலாம். 2026-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x