Last Updated : 02 Oct, 2024 05:00 PM

 

Published : 02 Oct 2024 05:00 PM
Last Updated : 02 Oct 2024 05:00 PM

சென்னையில் விமானப் படை சாகச ஒத்திகை: ரஃபேல், தேஜஸ், சூர்யகிரன் போர் விமான சாகசங்களை கண்டு வியந்த மக்கள்!

விமானப் படை தினத்தை முன்னிட்டு சென்னை  மெரினா கடற்கரையில் 2-வது நாளாக நடைபெற்ற விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர் | படங்கள்: ம.பிரபு

சென்னை: விமானப் படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி 2-வது நாளாக இன்றும் (அக்.2) நடைபெற்றது. இதில், ரஃபேல், சுகாய், தேஜஸ், சூர்யகிரன் ஆகிய போர் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திக் காட்டிய சாகச நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வியந்தனர்.

இந்திய விமானப்ப படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், வரும் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய விமானப்படை விமானங்களின் ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்.1) தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, வானில் குட்டிக் கரணங்கள் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின.மேலும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனம் ஆகியவை நடைபெற்றன.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தின.

மேலும், எம்ஐ-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளை மீட்பது போன்ற சாகச காட்சிகளை தத்ரூபமாக செய்து காட்டினர். அதேபோல், சேட்டக் ரக ஹெலிகாப்டர்களில் வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து தேசியக் கொடியை ஏந்தியடி சாகசத்தில் ஈடுபட்டனர்.

இந்த விமான சாகச நிகழ்ச்சி குறித்து, விமானப் படை அதிகாரி ஏர் கமாடோர் எச்.அசுதானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே மெரினா கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இன்றைய ஒத்திகை நிகழ்ச்சியில் 54 விமானங்கள் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன.2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், விமானிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

4 ஆயிரம் மீட்டர் நீளமான மெரினா கடற்கரை எங்களுக்கு இந்த சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. 4-ம் தேதி முழு அளவிலான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் தேதி நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து இந்நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதோடு, இந்நிகழ்ச்சியை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்,” என்றார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இன்று அரசு விடுமுறை தினம் என்பதால், இந்த சாகச நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் ஏராளமான அளவில் மெரினா கடற்கரையில் திரண்டனர். சிலர் காமராஜர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். மெரினா கடற்கரை சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x