Published : 02 Oct 2024 04:27 PM
Last Updated : 02 Oct 2024 04:27 PM
புதுச்சேரி: தூய்மை, சுகாதாரத்தை பேணுவதை அன்றாட வாழ்வின் பகுதியாக மாற்ற வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறை, புதுவை நகராட்சி சார்பில் கம்பன் கலையரங்கில் இன்று (அக்.2) நடந்த தூய்மை இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியதாவது: "கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப் பட்ட தூய்மை இந்தியா திட்டம் என்று சொல்லப்படுகின்ற ‘ஸ்வச் பாரத்’ திட்டம் தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த தூய்மை இந்தியா திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான திட்டம்.
இந்தியாவை ஒரு தூய்மையான நாடாக சுகாதாரமான நாடாக மாற்ற வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றுவதற்காக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்திருக்கிறது. 120 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டை தூய்மையான, சுகாதாரமான நாடாக மாற்றுவது என்பதும் அதற்காக ஒரு திட்டத்தை மக்கள் இயக்கமாக உருவாக்குவது என்பதும் சாதாரண விஷயம் அல்ல.
ஆனால், அனைத்து மக்களின் ஆதரவோடும் பங்களிப்போடும் இன்று இது வெற்றி பெற்று இருக்கிறது. கடற்கரைத் தூய்மை, சுற்றுலா தலங்கள், பாரம்பரிய பண்பாட்டு மையங்கள், வழிபாட்டு இடங்களின் தூய்மை என்று பலவிதமாக செயல்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் தான் இந்த திட்டத்தின் தூதுவர்களாக செயல்பட்டவர்கள். அவர்கள் இல்லையென்றால் இந்த திட்டம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்காது. இந்தியாவை தூய்மையான நாடாக மாற்றுகின்ற பொறுப்பு அரசு அல்லது தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும். நாம் அனைவரும் அந்த பொறுப் புணர்வையும் ஈடுபாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமாக நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்காக அரசும் தனி நபர்களும் சுகாதாரப் பாதுகாப்புக்காக செய்யக்கூடிய செலவினத்தை வெகுவாக குறைக்க முடியும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமங்கள் நகரங்கள் என்று எல்லா இடங்களிலும் கட்டப்படும் கழிவறைகளால் சமுதாயத்தில் நம்முடைய பெண்களின் சுய மரியாதையையும் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய முடிந்தது. இவ்விழிப்புணர்வை இன்னும் அதிகமாக நாம் ஏற்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் நாமும் குப்பைகளை போடக்கூடாது, மற்றவர்களையும் போட விடக்கூடாது. நம்முடைய சுற்றுப்புறம் தூய்மையாக சுகாதாரமாக இருந்தால்தான் ஊரும், நாடும் தூய்மையாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்புணர்வு ஏற்படும்போது காந்தியடிகள் கண்ட தூய்மையான சுகாதாரமான இந்தியா என்ற கனவு முழுவடிவம் பெறும். புதுச்சேரி ஒரு சுற்றுலா நகரம். நாம் புதுச்சேரி நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும்போதுதான் இங்கே வருகின்ற சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வருவார்கள். இது நம்முடைய மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.
மக்களாகிய நாம் அனைவரும் தூய்மையையும், சுகாதாரத்தையும் பேணுவதை நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மகாத்மா காந்தியடிகள் கண்ட தூய்மையான - சுகாதாரமான பாரதம் உருவாகும். அதுவே, காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளில் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.” என்று ஆளுநர் கூறினார்.
இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.பி-யான செல்வ கணபதி, எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, பாஸ்கர், சம்பத், பிரகாஷ் குமார், விவிலியன் ரிச்சர்ட், தலைமைச் செயலர் சரத் சௌகான், அரசு செயலர்கள் ஜவஹர், கேசவன், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், புதுவை நகராட்சி ஆணையர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒரு தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் இன்று இத்திட்டத்தை ஆளுநரும் முதல்வரும் தொடங்கி வைத்தனர். அதற்காக, ஆளுநருடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT