Published : 02 Oct 2024 04:11 PM
Last Updated : 02 Oct 2024 04:11 PM
சென்னை: டெல்லி சாணக்யபுரி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளை அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் திட்ட அட்டவணை தயாரிக்கவும், பணியின் தரத்தை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி மிக தீவிர நிலஅதிர்வு ஏற்படும் மண்டலமாக உள்ளது. எனவே, புதுடெல்லி சாணக்யபுரி, தமிழ்நாடு இல்ல வளாகத்தில் உள்ள பழைய வைகை இல்ல கட்டிடங்கள் அகற்றப்பட்டு, நில அதிர்வை தாங்கும் வகையிலான புதிய கட்டிடம் கட்ட ரூ.257 கோடி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 26-ம் தேதி இக்கட்டிடப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று (அக்.1) டெல்லியில் உள்ள பொதிகை இல்ல கூட்டரங்கில் ஆய்வு செய்தார்.
இக்கட்டிடம் மூன்று அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களை கொண்டு, 3 லட்சம் சதுர அடி பரப்பளவில், பணியாளர் குடியிருப்பு பகுதி, விருந்தினர் இல்ல பகுதி மற்றும் மிக முக்கிய பிரமுகர் பகுதி ஆகிய மூன்று பகுதிகளாகக் கட்டப்பட்டு வருகிறது. ஆய்வின் போது, அமைச்சர் எ.வ.வேலு, பழைய கட்டிடங்களை பாதுகாப்பாக அகற்றி, கட்டிட கழிவுப் பொருட்கள் அப்புறப்படுத்துதல், கட்டிட பணித்தளத்தின் கீழ் உள்ள பாறைக் கற்களை அப்புறப்படுத்துதல், பிரதான வைகை இல்ல கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகங்களுக்கு மாற்றுக் கட்டிடத்தில் இயங்க வசதி ஆகிய பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின் அமைச்சர் வேலு பேசியதாவது: “டெல்லி அரசு குளிர் கால காற்று மாசுவை தடுக்கும் விதமாக, கட்டுமான பணிகளுக்கான 14 அம்ச கட்டுப்பாடுகளை தற்போது அறிவித்துள்ளது. பணித்தளத்தில் அக்கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கட்டுமான தளத்தைச் சுற்றி முழுவதுமாக இரும்புத் தகடு தடுப்பு அமைக்க வேண்டும். நச்சுப் புகையை அகற்ற, பணித்தளத்தில் போதுமான தண்ணீர் தெளிப்பான் கருவிகளைப் பொருத்த வேண்டும்.
பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியிலும், அடித்தளம் வானம் தோண்டும் பணியிலும் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கண்காணிக்கும் பொறியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு சாதனங்கள் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், பணியாளர்களைக் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும், கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் தரச்சோதனை செய்து தரமான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியையும் பொறியாளர்கள் தரச்சோதனை செய்ய வேண்டும். பணிகளை அடுத்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க திட்ட அட்டவணை தயாரித்து பணி முன்னேற்றம் கண்காணிக்கப்பட வேண்டும்,” என்று அவர் பேசினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், டெல்லி உள்ளுறை ஆணையர் ஆஷிஷ்குமார், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, சிறப்புப் பணி அலுவலர் இரா.விஸ்வநாத், தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT