Published : 02 Oct 2024 02:35 PM
Last Updated : 02 Oct 2024 02:35 PM

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இரு முறை குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை

மெரினா கடற்கரையில் வைக்க கொண்டுவரப்படும் குப்பை தொட்டி.

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைகளில் தினமும் 2 வேளையும் இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

ஆசியாவின் 2-வது பெரிய கடற்கரையாக மெரினா விளங்குகிறது. சென்னை மாநகருக்கு கல்வி, வேலை, குடும்ப சுப நிகழ்ச்சிகள் நிமித்தமாக வருவோர், மெரினா கடற்கரைக்குச் செல்லாமல் சொந்த ஊர் திரும்புவதில்லை. அந்த அளவுக்கு உள் நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரையும் மெரினா கடற்கரை வெகுவாக கவர்ந்துள்ளது. இக்கடற்கரைக்கு தினமும் குறைந்தப் பட்சம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விழாக்காலங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்து செல்கிறார்கள்.

இதற்கு இணையாக வரலாற்று புகழ் பெற்றதாக பெசன்ட் நகர் கடற்கரை விளங்குகிறது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் வரத்துக்கு ஏற்ப, உணவகங்களின் எண்ணிக்கையும் 1500-க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தக் கடற்கரைகளில் உருவாகும் குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் 7 நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் மட்டும் குப்பைகளை அகற்றி வருகின்றன. ஆனால், மாலை நேரத்தில் மக்கள் வரத்து அதிகரிக்கும் போதே, மேலும் குப்பையாகி சென்னைக் கடற்கரைகள் அசுத்தமாக காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் அக்.1ம் தேதி முதல் இவ்விரு கடற்கரைகளிலும் தூய்மையை உறுதி செய்ய, இயந்திரங்கள் மூலம் தினமும் இரு முறை குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் குப்பைகளை போட, மீன் உள்ளிட்ட விலங்குகள் உருவத்தில் குப்பைத் தொட்டிகள் கூடுதலாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x