Last Updated : 02 Oct, 2024 02:19 PM

 

Published : 02 Oct 2024 02:19 PM
Last Updated : 02 Oct 2024 02:19 PM

‘இந்தியில் மத்திய அரசின் திட்டப் பெயர்கள்’ - ஆளுநர் முன்பாக முதல்வர் ரங்கசாமி காட்டம்

முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: மத்திய அரசு திட்டங்களின் பெயர்கள் இந்தியில் இருப்பதால் எனக்கும், மக்களுக்கும் தெரியவில்லை என ஆளுநர் முன்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காட்டமாக தெரிவித்தார். மேலும் அவர், பிரதமர் அறிவித்த திட்டங்களை தமிழில் தர வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் ஸ்வச்தா ஹி சேவா (தூய்மையே சேவை) இருவாரப்பணி நிறைவு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி பங்கேற்று சைக்கிள் பேரணி, மாணவ - மாணவியர் ஓட்டம், உழவர்சந்தை தூய்மைப்பணி உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தனர்.

அதையடுத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: நமது நாடு சுத்தமாக தூய்மையாக இருக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு காந்தியடிகள் பிறந்த தினத்தில் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக பத்தாண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்ட பெயர் சுவட்சதா ஹி சேவா என இந்தியில் உள்ளது.

திட்டங்களின் பெயர் தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். ஆனால், திட்டங்களின் பெயர்கள் தமிழில் இல்லை. உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். திட்டங்களின் பெயர்களை தமிழில் தர வேண்டும். இது எப்போது மாறிப்போனது என்று தெரியவில்லை. திட்டத்தைப் பற்றி நானே தேடுகிறேன். நானே தேடினால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

கொடி அசைத்து தொடங்கி வைக்கும்போது, குழந்தைகள் இதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்றனர். அதில் இருக்கும் வாசகங்களில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. தமிழில் எழுதிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறுபட்டதற்கு காரணம் என்ன? இதெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டிய செய்தி. இதைக்கூட தமிழில் தராவிட்டால் என்ன செய்வது? பிரதமர் பல திட்டங்களை அறிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கான அந்தத் திட்டங்களுக்காக கோடிக் கணக்கில் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், அப்படி செலவழிக்கப்படும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியாக புரிந்ததா என்பது கேள்விக்குறிதான். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தான விளம்பரங்கள் மக்களுக்கு சரியாக தெரியாததால் அவற்றை தமிழில் சொல்ல வேண்டும் என ஆளுநருடன் பேசிக்கொண்டிருந்தோம்.

மத்திய அரசு திட்டங்களை தமிழில் விளம்பரம் செய்யலாம் என பிரதமரிடம் ஆளுநர் தெரிவித்தற்கு ஏன் செய்யவில்லை என்று பிரதமர் சொன்னதாக ஆளுநர் தெரிவித்தார். திட்டங்கள் நம் மொழியில் இருந்தால் தான் மக்களுக்கு தெரியும். பொதுமக்களுக்கு செல்லும் சேதிகளை தமிழில் சொல்ல வேண்டியது அவசியம். ஆகவே பிரதமர் அறிவித்துள்ள மத்திய அரசின் திட்டங்களை அதிகாரிகள் எனக்கு தமிழில் மொழிபெயர்த்துத் தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x