Published : 02 Oct 2024 01:36 PM
Last Updated : 02 Oct 2024 01:36 PM
சென்னை: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில், காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு, தீபாவளி கதர் சிறப்பு விற்பனை மற்றும் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் வளாகத்தில் இன்று (அக்.2) நடைபெற்றது.
இதில், பால்வளம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதல் பட்டுப் புடவை விற்பனையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது; நம் கதர் துறை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, தனி துறையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு கதர் விற்பனை நடைபெற்றது. இப்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெறுகிறது.
கொலு மாதம் வந்துவிட்டது. தற்போது விற்பனை தொடங்கிவிட்டது. விற்பனையை மேம்படுத்தும் வகையில், 11 மாடிகளில் புதிய கட்டிடம் புதிய பொழிவோடு கட்டமைக்கப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளில் மட்டும் விழா கொண்டாடுவதோடு அல்லாமல், இந்தத் துறை மென்மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்கள், மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள், பனை வாரியத்தின் பொருட்கள், காண்போரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்ணமிகு தெய்வீக சிற்பங்கள், டெரகோட்டா வகை பொம்மைகள், கற் சிற்பங்கள், தரமான பனங் கருப்பட்டி , நாட்டு சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய 28 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT