Published : 02 Oct 2024 07:06 AM
Last Updated : 02 Oct 2024 07:06 AM

முல்லை பெரியாறு விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை குழப்ப கூடாது: பழனிசாமிக்கு துரைமுருகன் பதில்

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக மக்களை அதிமுக குழப்பவேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:

முல்லை பெரியாறு அணை மற்றும் பேபி அணையை பலப்படுத்திய பிறகு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2006 பிப்ரவரி 27-ம்தேதி உத்தரவிட்டது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இப்பிரச்சினையில் ஒத்துழைக்க கேரள அரசுக்கு அறிவுறுத்துமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் கடந்த 2021 ஜூன் 17-ம் தேதி அளித்த மனுவில் கூறப்பட்டது. அதே ஆண்டின் ஜூலை 6-ம் தேதி நானும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, அணையை பலப்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு மனு கொடுத்தேன். தமிழக தலைமைச் செயலர், நீர்வளத் துறை செயலரும் கேரள அதிகாரிகளுடன் கடிதம் மற்றும் பல வழக்குகள் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழக அரசால்கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன், கூடுதலாக 2021 நவம்பர் 27-ம் தேதி ஒரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2022 நவம்பர் 14 மற்றும் 2023 ஆகஸ்ட் 7-ம் தேதிகளில் இடைக்கால மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2022 மார்ச் 3-ம் தேதிகேரள நீர்வளத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ‘பேபிஅணை அருகே உள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன். முல்லை பெரியாறு அணையின் மேற்பார்வை குழு அறிவுரைப்படி, 2022 டிசம்பர் 12-ம் தேதி, 2023 மே 5-ம் தேதிகளில் நடைபெற்ற இரு மாநில தலைமைச் செயலர்கள் கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வல்லக்கடவு - முல்லை பெரியாறு அணை வனச்சாலையை சரிசெய்ய, கேரள அரசு ரூ.31.24 லட்சத்துக்கு ஒப்புதல்அளித்தது. இந்த தொகையை கேரள அரசுக்கு தமிழக அரசு 2023அக்டோபர் 4-ம் தேதி செலுத்தியது. தரைப்பாலம் சீரமைக்கும் பணி 2024 பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி மே 9-ம் தேதி முடிக்கப்பட்டுள்ளது.

பேபி அணையின் மீதமுள்ளபணிகளை முடிக்க அனுமதிஅளிக்குமாறு கடிதங்கள், மேற்பார்வை குழு கூட்டங்கள் மூலமாக,கேரள அரசுக்கு தமிழக அரசுவலியுறுத்தி வருகிறது. பலப்படுத்தும் மற்ற பணிகளை மேற்கொண்டு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே, அரசியல் லாபம் கருதி,அண்டை மாநில நதிநீர் பிரச்சினையில் வெற்று அறிக்கைகளை வெளியிட்டு, போராட்டங்களை அறிவிக்கும் அதிமுக, மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்துஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x