Published : 01 Oct 2024 07:22 PM
Last Updated : 01 Oct 2024 07:22 PM
சென்னை: “2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மீது தேவசகாயம், கோபி, கணேஷ்குமார், அருள்மணி என 4 பேர் நேரடியாக புகாரளித்தனர். வழக்குத் தொடர்ந்தனர். அவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தது. இவை எதுவும் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வரவில்லையாம். செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தையை மட்டும் நம்பிக் கொண்டு அவரை உத்தமராக ஏற்றுக் கொண்டாராம் மு.க.ஸ்டாலின். இப்படி ஒன்றுமே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை முதல்வரிடம் இருந்தால் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்?,” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் வாங்கி, அதை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்ப்ட்டு சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜியை தியாகி என்று முதல்வர் பாராட்டினால், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வினா எழுப்பியிருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர் எழுப்பிய வினாக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாத முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லை. மாறாக, மு.க.ஸ்டாலினின் பலவீனங்களும், துரோகங்களும், சமூக அநீதிகளும் தான் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி உத்தமர் என்று காட்டுவதற்காக ஆர்.எஸ்.பாரதி முன்வைத்துள்ள வாதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவற்றை அவரைச் சார்ந்தவர்கள் தவிர, முட்டாள்கள் கூட நம்ப மாட்டார்கள். 2015-ம் ஆண்டில் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினாராம். அதன்பின் 2018-ம் ஆண்டில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னாராம்; அதனால் அவர் குற்றமற்றவராம். எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று ஆளுனரிடம் மனு அளித்ததால் தான் செந்தில் பாலாஜி மீது பொய்வழக்கு பதிவு செய்யப்ப்பட்டதாம். ஆர்.எஸ். பாரதியின் இந்த கம்பி கட்டும் கதைகளையெல்லாம் அண்ணா வழியிலும், கருணாநிதி வழியிலும் வந்த திமுகவினர் கூட நம்ப மாட்டார்கள்.
தமிழகத்தின் முதல்வராக இன்று வீற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் 7 முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை மேயர், ஒருமுறை துணை முதல்வர் மற்றும் அமைச்சர், ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். அரசியலில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் போது அதை பலமுறை சரிபார்க்க வேண்டும் என்ற அடிப்படை அவருக்கு தெரிந்திருக்கும். அப்படிப்பட்டவர் 2016 தேர்தலின் போது அவரிடமிருந்த விவரங்களை நம்பிக் கொண்டு செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினாராம்; 2018-ம் ஆண்டில் திமுகவில் சேர செந்தில் பாலாஜி முன்வந்த போது அவர் கொடுத்த விளக்கங்களை ஏற்று அவரை உத்தமர் என்று மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டாராம்.
செந்தில் பாலாஜி சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கா மு.க.ஸ்டாலின் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறார்? 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மீது தேவசகாயம், கோபி, கணேஷ்குமார், அருள்மணி என 4 பேர் நேரடியாக புகாரளித்தனர்; வழக்குத் தொடர்ந்தனர். அவற்றின் மீது சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தது. இவை எதுவும் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு வரவில்லையாம். தியாகசீலர் செந்தில் பாலாஜி சொன்ன ஒற்றை வார்த்தையை மட்டும் நம்பிக் கொண்டு அவரை உத்தமராக ஏற்றுக் கொண்டாராம் மு.க.ஸ்டாலின். இப்படி ஒன்றுமே தெரியாத எடுப்பார் கைப்பிள்ளை முதல்வரிடம் இருந்தால் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்?
செந்தில் பாலாஜி மீது குளித்தலை பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், தியாகசீலர் செந்தில் பாலாஜி கூறியது தான் உண்மை என்றால், பொய்ப்புகார் கூறியதற்காக செந்தில் பாலாஜியிடம் எப்போதாவது மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தாரா? பல்லாயிரம் பேருக்கு வேலை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து, அந்தக் குடும்பங்களையெல்லாம் நடுத்தெருவுக்கு கொண்டு வந்த செந்தில் பாலாஜியை விட, அவரை உத்தமர் என்றும், தியாகத்தின் திருவுருவம் என்றும் புகழ்மாலை பாடிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் எப்படி நம்புவர்?
அமலாக்கத்துறையின் செயல்பாடுகளை எதிர்க்காமல் பாஜகவிடம் பாமக பம்மிக் கிடப்பதாக பாரதி கூறியிருக்கிறார். 2ஜி வழக்கில் சிக்கி கைது, சிறை என்று சின்னாபின்னமாகிக் கிடந்த திமுகவிடம் 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் எவ்வாறு தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்தியது என்பதை அங்கேயே முகாமிட்டிருக்கும் பாரதி அறியாதவர் அல்ல. அறிவாலயத்தில் மேல்மாடியில் சிபிஐ-யைக் கொண்டு சோதனை நடத்திக் கொண்டு கீழ்த்தளத்தில் நடைபெற்ற பேச்சுகளின் போது முற்றிலுமாக சரணடைந்து, பாமகவுக்கு வழங்கப்பட்டிருந்த தொகுதிகளில் ஒன்றை இரவால் வாங்கி காங்கிரசுக்கு 64 இடங்களை தாரை வார்த்ததே அதற்குப் பெயர் தான் பம்முதல். இப்போதும் கூட மத்திய அரசிடம் திமுக பம்மிக் கொண்டு தான் இருக்கிறது.
எந்தக் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையிலும், மக்கள் நலனிலும் சமரசம் செய்து கொள்ளும் வழக்கம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடையாது. இதில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஏதேனும் ஐயம் இருந்தால், பாமகவின் தயவால் கட்டப்பட்டுள்ள உதயநிதியின் தாத்தா கருணாநிதியின் கல்லறைக்கு சென்று காதை வைத்துப் பார்க்கட்டும். “தைலாபுரத்திலிருந்து தான் எனக்கு தைலம் வருகிறது,” என்ற முழக்கம் அவருக்கு கேட்கும். ராமதாஸின் சத்தியத்தைப் பற்றி பேசும் ஆர்.எஸ்.பாரதிக்கு இது தான் எனது கடைசி தேர்தல்; இனி நான் போட்டியிட மாட்டேன் என்று கருணாநிதி செய்த சத்தியங்கள் நினைவிருக்கிறதா? என் குடும்பத்திலிருந்து எனது மகனோ, மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 2016-ம் ஆண்டில் சன்தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மு.க.ஸ்டாலின் சத்தியம் செய்தது பாரதிக்கு மறந்து விட்டதா?
கட்சிக்காக உழைத்த பலர் இருக்கும் போது நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் சத்தியம் செய்தது பாரதிக்கு நினைவில்லையா? அரசியலுக்கு வந்து சட்டமன்ற உறுப்பினரான பிறகும் எனக்கு அமைச்சர் பதவி மீது ஆசையில்லை என்று சத்தியம் செய்து விட்டு அதை அடைந்ததும், துணை முதல்வர் பதவி என்பதெல்லாம் வதந்தி என்று கூறி விட்டு, துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி போன்றவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டதும் பாரதிக்கு தெரியாதா? பதவிக்காக சத்தியத்தையெல்லாம் சர்க்கரை பொங்கலாக்கும் பாரதி முதல் மு.க.ஸ்டாலின் வரை எந்த திமுகவினருக்கும் எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
திமுகவுக்கும் சமூகநீதிக்கும் எள்ளளவும் தொடர்பு கிடையாது. தமிழகத்தை திமுக 6 முறை ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களான வன்னியர்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் எப்போதாவது தலா 4 அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா? திமுகவின் சமூக அநீதி அரசியலை ராமதாஸ் அம்பலப்படுத்திய பிறகு தானே, இப்போது இரு சமூகங்களுக்கும் தலா 4 பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எள்ளளவும் தகுதி இல்லை.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய திமுகவும், திமுக அரசும் கொள்கையின் சின்னங்களா? இல்லையே, அவை வணிகத்தின் அடையாளங்கள் தானே. திமுகவுக்காக தலைமுறை தலைமுறையாக உழைத்தவர்களுக்காக அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது? மொத்தமுள்ள 35 அமைச்சர்களில் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி, சு.முத்துசாமி, ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜி, சேகர் பாபு என 7 பதவிகள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவி வந்தவர்களுக்குத் தானே தாரைவார்க்கப்பட்டுள்ளன.
அதிலும் திமுகவின் மூத்த அமைச்சர்களுக்கெல்லாம் வழங்கப்படாத பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, துறைமுகங்கள் துறை ஆகியவை எ.வ.வேலுவுக்கும், மின்சாரம், மதுவிலக்குத்துறை ஆகியவை செந்தில் பாலாஜிக்கும், வருவாய்த்துறை சாத்தூர் ராமச்சந்திரனுக்கும், வீட்டுவசதி முத்துசாமிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை சேகர்பாபுவுக்கு வழங்கப் பட்டதன் மர்மம் என்ன? அவர்கள் பெரியாரையும், அண்ணாவையும், கருணாநிதியையும் விட கொள்கை குன்றங்கள் என்பதாலா, நிர்வாகப் புலிகள் என்பதாலா? கரப்சன், கமிசன், கலெக்சனில் சிறந்தவர்கள் என்பதாலும், அதில் தலைமைக்கு உரிய பங்கை தவறாமல் தந்து விடுவார்கள் என்பதாலும் தானே?
திமுகவின் தலைமைக்கு செந்தில் பாலாஜி வேண்டியவர் என்றால் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொள்ளட்டும். மாறாக, அவருக்கு தியாகி, உத்தமர் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டுவது அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நீதி கிடைக்க பெரும் தடையாகி விடும். எனவே, செந்தில் பாலாஜியின் புகழ்பாடுவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதிலும் தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, “மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து தப்பித்து கொள்ளக் கமலாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் எல்லாம் செந்தில் பாலாஜி வழக்கை எதிர்கொள்ளும் திமுகவை தூற்ற கொஞ்சமும் அருகதை இல்லாதவர்கள்” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அதன் விவரம்: “பாமகவின் பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சனம் செய்யுங்கள்” - ராமதாஸுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT