Last Updated : 01 Oct, 2024 02:29 PM

2  

Published : 01 Oct 2024 02:29 PM
Last Updated : 01 Oct 2024 02:29 PM

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

மதுரை: சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த மக்கள் நல ஆலோசனை மையத்தின் தலைவர் விருமாண்டி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “மேட்டூர் அணையில் இருந்து வெளியாகும் காவிரி நீர் ஈரோடு, கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்கிறது. காவிரி ஆற்று நீரை நம்பி திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆதாரமாகவும் காவிரி நீர் உள்ளது. காவிரி பாயும் இடங்களில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காவிரி ஆற்றில் இருந்து நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் திருச்சி மாவட்டத்திற்கு என பயன்படுத்தப்படுகிறது.

இதுபோல பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீரை எடுப்பது, மணல் அள்ளுவது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் காவிரி ஆற்றை நம்பி உள்ள விவசாயப் பகுதிகளில் விவசாயம் பாதியாக குறைந்து விட்டது. காவிரி ஆற்றுப் பகுதிகளில் அங்காங்கே தடுப்பணைகளை கட்டினால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்கலாம். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவகங்கை கூட்டு குடிநீர் எனும் திட்டத்தின் கீழ், காவிரி ஆற்றில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியது.

நாள் ஒன்றுக்கு 86.5 மில்லியன் லிட்டர் நீர் இதற்கென காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நிலையில், கரூர் மாவட்டம் உமையாள்புரம், மருதூர் பகுதியில் தடுப்பணையை கட்டுமாறு மனு அளித்தோம். தடுப்பணை கட்டிய பின்பு திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் முழுவதுமாக முடிந்துவிட்டது.

ஆனால், தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கவில்லை. ஏற்கெனவே விவசாயப் பாதியாக குறைந்துவிட்ட நிலையில், மீதமிருக்கும் விவசாயத்தையாவது காப்பாற்ற வேண்டும். ஆகவே, கரூர் மாவட்டம் உமையாள்புரம், மருதூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் அதுவரை சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை கூட்டுக் குடிநீட் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையின் செயலர், தலைமைப் பொறியாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும், அடுத்தக்கட்ட விசாரணையை அக்.14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x