Published : 01 Oct 2024 08:40 AM
Last Updated : 01 Oct 2024 08:40 AM
சென்னை: “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் இவ்வாறாகப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காகவே நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானளது. பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் இன்று (அக்.01) அதிகாலை 6 மணியளவில் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், “ ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என முதல்வர் பதிவிட்டிருக்கிறார்.
இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் சோகம்.. தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘வேட்டையன்’ அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், நாளை (அக்.2) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிடுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT