Published : 01 Oct 2024 07:15 AM
Last Updated : 01 Oct 2024 07:15 AM
சென்னை: விஜய் கட்சி கொடியில் யானைசின்னம் பயன்படுத்திய விவகாரத்தில் தலையிட மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த ஆக.22-ம் தேதி கட்சி கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் விஜய் கட்சி கொடியில், தங்களது சின்னமான யானையை பயன்படுத்தி இருக்கிறார் என்றும், தேர்தல் நேரத்தில் இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும், விஜய் கட்சி கொடியில் இருந்து யானை படத்தை நீக்க வேண்டும் எனவும் கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
அதில், ‘இந்திய தேர்தல் ஆணை யத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தற்காலிக சின்னம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்புதான் ஒரு கட்சி விண்ணப்பித்து சின்னத்தைப் பெற முடியும். அரசியல் கட்சிகளின் கொடிக்கு, தேர்தல் ஆணையம் ஒருபோதும், ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறக்கூடிய அதிகாரம் தேர்தல்ஆணையத்துக்கு இல்லை. மேலும், தேர்தலின் போது, தமிழகவெற்றிக் கழகம் யானை சின்னத்தை பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில், பிற கட்சிகளின்சின்னங்களையும் பெயர்களையும் பிரதிபலிக்காமல் கொடி இருப்பதைக் கட்சிகள் உறுதிசெய்ய வேண்டும்’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிப்பால் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT