Published : 01 Oct 2024 05:44 AM
Last Updated : 01 Oct 2024 05:44 AM

தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு மாடி தோட்ட ‘கிட்' ரூ.450-க்கு விற்பனை: 50% மானிய விலையில் தரப்படுகிறது

சென்னை: தமிழகம் முழுவதும் மாடித் தோட்டத்துக்கான 'கிட்' மானிய விலையில் ரூ.450-க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் பொதுமக்களுக்கு மானிய விலையில் மாடித்தோட்ட தொகுப்பு (கிட்) வழங்கப்படுகிறது. வீட்டு மாடியில் காய்கறிகளை வளர்த்து பயன்பெறுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் அதற்கான பொருட்களை பெறுவதற்கு தோட்டக்கலைத் துறை இணையதளத்தில் https://www.tnhorticulture.tn.gov.in/kit/ விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கிட் விலை ரூ.900. ஐம்பது சதவீதம் மானியம். அதைக் கழித்து ரூ.450 செலுத்தி 'கிட்'டை பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு `கிட்'டில் 6 கிலோ எடையுள்ள தென்னை நார்கழிவு கட்டிகள்-2, ஆறு வகையான காய்கறி விதைகள், 6விதை பொட்டலங்கள், அசோஸ்பைரில்லம் 300 கிராம், பாஸ்போபாக்டீரியா 300 கிராம், ட்ரைக்கோடெர்மா விரிடி 200 கிராம், வேப்பெண்ணெய் 100 மி.லி, மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறையைவிளக்கும் கையேடு ஒன்றும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ``தமிழகம் முழுவதும் 20 ஆயிரம்மாடித் தோட்ட கிட்டுகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் அதிகபட்சமாக 3,500 மாடித்தோட்ட தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 மாடித் தோட்ட `கிட்'கள் வழங்கப்படும். சென்னை மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்த வர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் மாடித் தோட்ட `கிட்'டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x