Published : 30 Sep 2024 09:24 PM
Last Updated : 30 Sep 2024 09:24 PM
சென்னை: “சமூக ஊடகங்களில் என்ன ‘டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது” என்று திமுக ஐடி விங் அணியினருடனான உரையாடலில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. திராவிட மாதத்தின் நிறைவுநாளான இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றினார். அதன் விவரம்: “வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
நம்முடைய வரலாறு, சாதனைகள், பல்வேறு அரசியல் விவகாரங்களில் திராவிடப் பார்வை என்று, கழக முன்னோடிகள், பேச்சாளர்கள், தோழமை இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள், திராவிட இயக்கப் பற்றாளர்கள் எனப் பலரையும் “திராவிட மாதம்” நிகழ்ச்சியில் பேச வைத்து, பயனுள்ள, கருத்துள்ள முன்னெடுப்பை நம்முடைய ஐ.டி. விங் செய்கிறது. அதிலும் இது பவள விழா நிறைவு ஆண்டு. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, கடந்த காலத்தை எடைபோட்டு, நாம் அடுத்து நடைபோட வேண்டிய பாதையைத் தீர்மானிக்க கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உரிமைகள் மறுக்கப்பட்டு, வாய்ப்புகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழினம் மேலெழுந்து வந்த வரலாறுதான் நம்முடைய தி.மு.க. வரலாறு. இந்த இனம் இழிவில் இருந்து மீள வேண்டும் என்றுதான், சுயமரியாதையையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் ஊட்டினார் தந்தை பெரியார். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்தினார் பேரறிஞர் அண்ணா. “கட்டை விரலைக் கேட்டால் பட்டை உரியும்” என்று முழங்கிச் சட்டங்களும் திட்டங்களும் வகுத்துச் சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த உழைத்தார் நம்முடைய தலைவர் கருணாநிதி. அவரது உழைப்புதான் திமுகவை பாதுகாத்தது. அவர் விட்டுச் சென்றுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு - கடமை நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டிருக்கிறது! அந்தக் கடமையை, ‘நமக்கு நாமே’ நினைவூட்டிக் கொள்வதற்கான வாய்ப்புதான் இதுபோன்ற நிகழ்ச்சிகள்!
குறிப்பாக, இந்தாண்டு “உலகெங்கும் திராவிடம்” என்று, திராவிட இயக்க கொள்கைகளால், சட்டத்திட்டங்களால் உலகத்தின் பல நாடுகளிலும் தமிழர்கள் சிறப்பான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் நிறைய வீடியோக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்காக ஐ.டி. விங்கையும், அயலக அணியையும் பாராட்டுகிறேன்!
இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் உலகெங்கும் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதற்குப் பின்னால், நம்முடைய சமூக நீதிக் கொள்கை, தலைவர் ஆட்சிக் காலத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது, முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் தொழிற்கல்விக்கான கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தது உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. நாம் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் ஒரு படிக்கட்டு. ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொருவர் ஏறும்போதும், ஒரு தலைமுறையே முன்னேறுகிறது. இந்த முன்னேற்றம்தான் நாம் காண விரும்பும் வளர்ச்சி.
இவ்வாறு வளர்ச்சியடைந்த பலரின் வீடியோக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். வீடியோக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, அவர்களின் அனுபவத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டும், ‘கைடாக’ மாற்றியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சாமானியர்கள். என்னைப் போன்று - உங்களை போன்று எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். கற்ற கல்வியால் - பெற்ற வாய்ப்புகளால் - உழைத்த உழைப்பால் இன்றைக்கு உயரங்களில் இருக்கிறார்கள். இந்த உயரத்துக்கான பாதைதான், சமூக நீதி!
திராவிட இயக்கத்தின் சமூக நீதிப் போராட்ட வரலாற்றை, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைத் திட்டங்களைத் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். ஆக்கபூர்வமான கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும். பயனுள்ள கருத்தாக்கங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இனப் பகைவர்களும், அவர்களுக்குத் துணைபோகும் வீணர்களும் உண்டாக்கும் திசை திருப்பல்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்கக் கூடாது. சமூக ஊடகங்களில் என்ன ‘டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.
பொய்களையும், அவதூறுகளையும், பாதி உண்மைகளை மட்டும் சொல்லிச் சிலர் குழப்புவார்கள். அதற்கு நீங்கள் யாரும் ஏமாந்துவிடக் கூடாது. எந்தச் செய்தி வந்தாலும் ‘எமோஷனலாக’ மட்டும் அணுகாதீர்கள்; அந்தச் செய்தி பற்றிய உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பொய்யைப் பரப்புறகிறவர்களுக்கு இல்லாத இரண்டு, நம்மிடம் இருக்கிறது. அதுதான் தந்தை பெரியார் சொன்ன மானமும் அறிவும், மனிதருக்கு அழகு. எனவே, கவனமுடன் கடமையை ஆற்றுங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT