Published : 30 Sep 2024 08:33 PM
Last Updated : 30 Sep 2024 08:33 PM

3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

சென்னை: “கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி, கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக செயலாற்றிய 70 சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டாட்சி அமைப்புகளுக்கு ரூ.1.18 கோடி காசோலையுடன் மணிமேகலை விருதுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 516 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 6,135 பேருக்கு ரூ.31 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள், சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் வங்கி கடன் இணைப்புகளை வழங்கி ஊக்குவிக்கும் 13 வங்கிகளுக்கு, வங்கியாளர் விருதுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியது: “தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இது. ஒரு குழந்தைக்கு பட்டமோ, பரிசோ கிடைத்தால் அதை தன் தாயிடம் சென்று காட்ட ஆசைப்படும். அந்தவகையில் தமிழகத்தின் துணை முதல்வர் என்ற மாபெரும் பொறுப்பை ஏற்ற பின்பு, என்னுடைய தாய்மார்கள், சகோதரிகளை சந்திக்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14.91 லட்சம் உறுப்பினர்களை கொண்ட 1.25 லட்சம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான வங்கி கடன் இணைப்பு இலக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.84,815 கோடி மட்டுமே வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் ரூ.92 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 10 ஆண்டுகால கடன் இணைப்பை விட அதிகமாக திமுக அரசு 3 ஆண்டுகளிலே வழங்கியிருக்கிறது. அந்தவகையில் இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது” என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x