Last Updated : 30 Sep, 2024 08:31 PM

 

Published : 30 Sep 2024 08:31 PM
Last Updated : 30 Sep 2024 08:31 PM

‘மீண்டும் விரிவடையும் கோவை மாநகராட்சி எல்லை’- 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை

கோவை: கோவை மாநகராட்சியின் எல்லை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 16 உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, முக்கிய மாநகராட்சிகளில் ஒன்றாக கோவை மாநகராட்சி உள்ளது. 257.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. இவை நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2006- 11 காலக்கட்டத்தில் கோவை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது. தொடர்ந்து 2011ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 1 கிராம ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டது.

2011ம் ஆண்டுக்கு முன்பு இருந்த 72 வார்டுகள் 60 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. வார்டுகளின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதேபோல், இணைக்கப்பட்ட பகுதிகள் 40 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. வார்டுகளின் எண்ணிக்கை மொத்தம் 72-ல் இருந்து 100 ஆக உயர்ந்தது. இச்சூழலில், கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 14 ஆண்டுகளை கடந்த நிலையில், மீண்டும் எல்லையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சி எல்லையை ஒட்டி 5 கிலோ மீட்டர் தூர சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க ஆலோசனை நடத்தப்பட்டு, சமீபத்திய மாதங்களாக அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் பிரிவினர் மேற்கொண்டு வந்தனர். அதன் இறுதியாக, 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் என மொத்தம் 16 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து கோவை மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தால் அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமீபத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலூர் ஆகிய 4 பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம் பாளையம், பேரூர் செட்டி பாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளாணைப்பட்டி, கள்ளிப் பாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் ஆகிய 11 கிராம ஊராட்சிகள் ஆகியவை மாநகராட்சி எல்லையுடன் இணைக்கப்பட உள்ளன எனத் தெரியவந்துள்ளது. 16 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படும் போது, மாநகராட்சியின் எல்லை 438.54 சதுர கிலோ மீட்டராக விரிவடையும்.

மேலும், புதிய உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படுவதால் மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப் பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், ஒவ்வொரு வார்டுகளின் எல்லையும் மேலும் விரிவடையும் வாய்ப்புகள் உள்ளன. வார்டுகளின் எண், எல்லைகள் மறுவரையறை செய்த பின்னர், அடுத்தக்கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதே சமயம், மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் அரசு பரிந்துரைக்கு மட்டுமே சென்றுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்த பின்னரே, இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமடையும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x