Published : 30 Sep 2024 08:26 PM
Last Updated : 30 Sep 2024 08:26 PM
தஞ்சாவூர்: மரவள்ளி, வாழை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த நிலையில், கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேதத்தால் பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கு ரூ.1.14 கோடி இழப்பீடு வழங்க தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் வீராடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் ராமசாமி மகன் பவுன்ராஜ், பெரியசாமி மகன் சுந்தரவேல், ரத்தினம் மகன்கள் குணசேகரன், பிரகாஷ், துரைசாமி மகன் பெரியசாமி, அழகப்பன் மகன் பாஸ்கர் ஆகியோர் வீராடிப்பட்டியில் மரவள்ளி கிழங்கு, வாழை ஆகிய பயிர்களை சாகுபடி செய்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயிர் காப்பீடு பிரிமீயம் செலுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 16.11.2018 அன்று எதிர்பாராதவிதமாக வீசிய கஜா புயலில் வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை காப்பீடு நிறுவனத்துக்கு கடிதம் மற்றும் புகைப்படம் மூலம் தெரியப்படுத்தியும், இழப்பீடு வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனுவை அளித்தனர்.
இந்த வழக்கை பல்வேறு கட்டங்களாக விசாரித்து, இறுதியாக இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கும் மொத்தம் ரூ.1.14 கோடி இழப்பீடும், அதற்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்ற ஆணையத் தலைவர் த.சேகர் மற்றும் உறுப்பினர் கே.வேலுமணி ஆகியோர் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT