Last Updated : 30 Sep, 2024 06:18 PM

 

Published : 30 Sep 2024 06:18 PM
Last Updated : 30 Sep 2024 06:18 PM

நெல்லை மாநகராட்சி விரிவாக்கத்தில் மக்கள் கருத்துகளைக் கேட்டு முடிவு: மேயர் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி: “திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய பகுதிகளை இணைப்பது குறித்து அந்தந்த பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அரசு முடிவு எடுக்கும்,” என்று மேயர் கோ. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் இன்று (செப்.30) நடைபெற்றது. துணை மேயர் கே. ராஜு, ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்டு பிரச்சினைகளை பேசினர். திருநெல்வேலி மாநகராட்சியுடன் சுற்றியுள்ள ஊர்களை இணைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதா என்று பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் எழுப்பிய கேள்விக்கு, “இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் மக்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே அரசு முடிவு எடுக்கும்,” என்று மேயர் பதில் அளித்தார்.

தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதால் நீரின் தரம் கெட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு குடத்தில் தாமிரபரணி தண்ணீருடன் 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் கூட்டத்தில் பங்கேற்றார். இதுபோல் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது குறித்த விவகாரத்தை சில கவுன்சிலர்கள் எழுப்பினர். அவற்றுக்கு ஆணையர் பதில் அளித்து பேசியது: “திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி 17 கி.மீ. தூரம் பயணிக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமிரபரணி மாசுபாடு கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் மக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்திருக்கிறது. திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 16 இடங்களில் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கெல்லாம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கழிவுநீர் கலப்பது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும். தாமிரபரணியில் பாதாள சாக்கடை முழுவதும் கலப்பதை தடுக்க முழுமையான தீர்வு எட்டப்படும். அதன் புனிதம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு கண்டிப்பாக காலம் ஆகும். உடனடியாக முழுமையான தீர்வு எட்ட முடியாது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியுள்ளதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்த கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு, “பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகிறது,” என்று பதில் தெரிவித்தார்.

பகுதி சபா கூட்டங்களில் மக்கள் அளித்த மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படாதது குறித்து கவுன்சிலர் உலகநாதன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் சுட்டிக்காட்டினர். பூங்கா பராமரிப்புக்கென்று தனியாக தீர்மானம் கொண்டு வரவேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தளவாட பொருட்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர் சகாய ஜூலியட் வலியுறுத்தினார். மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் பலதெருவிளக்குகள் எரியவில்லை என்பதால் தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளன. தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளதாக கவுன்சிலர் ரசூல்மைதீன் குறிப்பிட்டு பேசினார்.

பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகளில் பில்லர்களில் தற்போது கீறல்கள் விழுந்துள்ளதாகவும், அங்கு கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு தனிநபர்கள் வசூலில் ஈடுபடுவதாகவும் கவுன்சிலர் சுப்புலட்சுமி குற்றஞ்சாட்டினார். ஆனால் தனிநபர்கள் யாருக்கும் பணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அரசு விதிகளுக்கு உட்பட்டே வெளிப்படை தன்மையுடன் அங்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஆணையர் பதில் அளித்தார். இந்த மார்க்கெட்டில் ஏற்கெனவே கடைகளை நடத்தியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பெடுத்து கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள விவகாரம் குறித்து கவுன்சிலர்கள் பலர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஆணையர், “மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக நிரந்தரமாகவும், தற்காலிகலமாகவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதை பாராட்டி மேயர் உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x