Published : 30 Sep 2024 01:47 PM
Last Updated : 30 Sep 2024 01:47 PM

மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை துறைமுகம் தொகுதியில்  மாநகராட்சி சார்பில் ரூ.6 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

சென்னை: “சென்னை மாநகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் துறைமுகம் தொகுதியில் ரூ.6 கோடியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ், பல்நோக்குக் கட்டிடம், நவீன பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பல்வேறு தெருக்களுக்கு பெயர்ப்பலகைகள் பொருத்துதல் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ராயபுரம் மண்டலம் பேரக்ஸ் சாலையில் இன்று (செப்.30) நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா முன்னிலையில் நடைபெற்ற நிழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்ளிடம் கூறியதாவது: துறைமுகம் தொகுதியில் ரூ.6 கோடியில் 17 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வட சென்னை வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும்போது, வடசென்னை மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும்.

சென்னை அசோக் நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணியிடத்தில் ஒருவர் விழுந்து இறந்தது வருத்தத்துக்குரிய சம்பவம். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரப் பகுதியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் உரிய பாதுகாப்பு தடுப்புகளை ஏற்படுத்தி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது இதை அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, ராயபுரம் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x