Published : 30 Sep 2024 01:29 PM
Last Updated : 30 Sep 2024 01:29 PM
விழுப்புரம்: தமிழக அமைச்சரவை நேற்று முன் தினம் மாற்றியமைக்கப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?
திமுக ஆட்சி அமைத்த 07.05.2021ம் தேதி அமைச்சரவையியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக செஞ்சி தொகுதி எம்எல்ஏவான மஸ்தான் பொறுப்பேற்றுக்கொண்டார். 1976ம் ஆண்டு திமுகவில் இணைந்த இவர் படிப்படியாக வளர்ந்து 1986ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை செஞ்சி பேரூராட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகித்தார்.
அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்புக்கான பின்னணி என்ன என்று திமுகவினர் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு: விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரான இவர் தன் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சிப்பதவி வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சகோதரர் 'காஜா நசீர்' செஞ்சி நகர திமுக செயலாளர் பதவியிலிருந்தும், மகன் மொக்தியார் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பதவியிலிருந்தும், அவரது மருமகன் ரிஸ்வான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் மஸ்தான் நீக்கப்பட்டு, அவரின் ஆதரவாளரான திண்டிவனத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்த டாக்டர் சேகரை திமுக தலைமை மாவட்ட செயலாளராக நியமித்தது. இப்படி தலைமை மஸ்தானுக்கு திமுக தலைமை எச்சரிக்கை மணியை ஒலித்தது. இப்படி இருக்கையில் மீண்டும் செஞ்சி மஸ்தானுக்கு கட்சி பதவியை வழங்க முடிவு செய்த திமுக, மாவட்ட அவைத்தலைவராக அவர் நியமிக்கபடுவதாக அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவியை ஏற்கனவே மஸ்தான் வகித்த பதவிதான் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே திமுக நிர்வாகிளைவிட மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கியதாக திமுக தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டது. திண்டிவனம் நகராட்சியில் திமுக நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிசந்திரனை எதிர்த்து திமுக நகர்மன்ற உறுப்பினர்களே வெளிநடப்பு செய்த ”சரித்திர நிகழ்வும்” நடைபெற்றது. மேலும் மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலிலும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு அமைச்சர் மஸ்தானுக்கு ஒரு போன் கால் வந்தது. சற்று தள்ளிப்போய் தனியே பேசிவிட்டு வந்த அவரின் முகம் வெளிறி இருந்தது. அப்போதே கட்சியினர் மத்தியில் அமைச்சரவை மாற்றம் குறித்த கோப்பு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஸ்தான் பெயரும் லிஸ்டில் இருக்கிறது என்ற தகவல் படிப்படியாக உறுதியானது.
விழுப்புரம் மாவட்டதில் பொன்முடி, மஸ்தான் ஆதரவாளர்களிடையே கடுமையான போட்டி நடைப்பெற்று வந்தது. பேனர்கள் வைப்பதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து பொன்முடி மைக்கை பிடுங்கியபோது, இருவருக்கும் சுமுகமான உறவு இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த நிலையில் அமைச்சர் மஸ்தான் கள்ளச்ச்சாரா வியாபாரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவரின் குடும்பத்தினரின் செலுத்தும் ஆதிக்கம், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் நன்மை செய்வது, டெண்டர் ஒதுக்குவதில் பாரபட்சம் ஆகிய புகார்கள் திமுக தலைமைக்கு பறந்தது. முதல்வரை நேரில் சந்தித்தே திண்டிவனம் திமுகவினர் புகார்களை அளித்தனர். மக்களைவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் குறைவான வாக்குகளை பெற்றுத்தரும் திமுக நிர்வாகிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
அதற்கேற்ப கடந்த சட்டமன்ற தேர்தலில் 35,803 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர் மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு கூடுதலாக 12 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற தகவலும் தலைமைக்கு தெரிந்தது. விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டத்தில் உள்ள மூத்த அமைச்சருக்கு நெருக்கமாக இருந்த மஸ்தான் மக்களவைத் தேர்தலுக்கு பின் அந்த நெருக்கம் குறைந்தது. அந்த நெருக்கம் குறைந்ததால்தான் மாவட்ட செயலாளர் பதவியை இழக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடியின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தும் தெரிவித்தார். ஆனாலும் இதனை பொன்முடி ஏற்கவில்லை.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக வடக்கு மாவட்டத்தில் திமுக எம் எல் ஏவாக மஸ்தான் மட்டுமே இருந்தார். தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் பொன்முடி, லட்சுமணன், அன்னியூர் சிவா ஆகியோர் உள்ளனர். வரும் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலும், கட்சி நிர்வாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விரைவில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. என்கிறார்கள்.
இதற்கிடையே நேற்று செஞ்சி தொகுதிகுட்பட்ட மேல்எடையாலம் கிராமத்திற்குட்பட்ட கடக்கால் தோப்பு பள்ளிவாசலில் நடைபெற்ற மிலாடி நபி "பொது விருந்தில்" செஞ்சி எம் எல் ஏவும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்.
அவரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் “அரசாட்சி ஏற்க தசரதன் சொன்ன போதும்,காட்டிற்குச் சென்று 14 ஆண்டுகள் பொறுத்துத் திரும்பி வா என்பது அரசக்கட்டளை எனக் கைகேயி சொன்னபோதும் ராமன் முகம் எப்படியிருந்தததோ அந்த மலர்ச்சி மஸ்தானிடம் இருந்தது” என்று பதிவு செய்கிறார்கள். அரசியலில் இதுவரை தோல்வியே சந்திக்காத முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கு முதல் சறுக்கல் இது...!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT