Published : 30 Sep 2024 05:12 AM
Last Updated : 30 Sep 2024 05:12 AM
சென்னை: தமிழகத்தில் இன்று (செப். 30) கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அக்.5-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப். 29-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆகிய இடங்களில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT