Published : 30 Sep 2024 04:54 AM
Last Updated : 30 Sep 2024 04:54 AM

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்: துணை முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: துணை முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பவள விழாவை கொண்டாடும் திமுக, தமிழகத்தை 6-வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இன்று நாட்டிலேயே 2-வது பெரியபொருளாதார மாநிலமாக தமிழகம்உள்ளது. மாநில வளர்ச்சியின் குறியீடுகளாக உள்ள அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. சமூகநீதி சிந்தனையோடு, தமிழகத்தின் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்புநிலை மக்கள், ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கியுள்ளோம்.

அரசும், பொறுப்பும், தலைமையும், முதல்வரின் செயல்களும் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்ந்தவன் நான். அதன்படியே செயல்படுபவன். மூன்றாண்டு வளர்ச்சிக்கு தமிழக அமைச்சர்கள் அனைவரும் பங்களித்துள்ளனர். இதன் இன்னொரு கட்டமாகவே துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரான எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக அவர் இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலம் இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல, உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. அதேபோல, தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். நாள்தோறும் கண்காணித்து அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டி வருகிறார். திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டவர்களாக கூர் தீட்டியும் வருகிறார்.

கூடுதலாக உழைக்க வேண்டும்: அவரது செயல்பாடுகள் கட்சி வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலான உழைப்பை அவர் செலுத்த வேண்டும். திமுகதொண்டர்களின் உள்ளக் கிடக்கையையும் உணர்வையும் புரிந்துகொண்டு, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் செயலாற்ற வேண்டும்.

சிறையை ஏற்றதுதான் தியாகம்: செந்தில் பாலாஜிக்கு மீண்டும்அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது தியாகத்தை நான் வாழ்த்தியதை சிலரால் பொறுக்க இயலவில்லை. அவரை வைத்து திமுகவுக்கு எதிரான சதிச்செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். இளைஞர் அணி காலம்தொட்டு என்னுடன் களப்பணியாற்றியவர்கள் சேலம் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர். மாணவப் பருவம் முதலே திராவிடக் கொள்கையில் ஊறி அடிமட்டத் தொண்டராக திமுகவுக்கு உழைத்த கோவி.செழியனும் அமைச்சர் பொறுப்பேற்கிறார். புதிய அமைச்சர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த கால உழைப்பையும், நிகழ்கால திறனையும் மனதில்வைத்து இந்த பொறுப்பை வழங்கியுள்ளேன். வழங்கப்பட்டதுறையை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து, அத்துறையின் மூலம் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு, துறையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய துறையை கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அரசு என்பது கூட்டுப் பொறுப்பு ஆகும். அமைச்சர்களின் கூட்டுச்சேர்க்கைதான் முதல்வராகிய நான். அமைச்சர்கள் அனைவர் மீதும் எந்தளவு நான் நம்பிக்கை வைத்துள்ளேனோ, அதைவிட அதிகமான நம்பிக்கையை நாட்டுமக்கள் வைத்துள்ளனர். மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும், கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்கிறதா என்பதை கவனிப்போம். இனி எந்நாளும் தமிழகத்தை திமுகதான் ஆளும் என்ற நிலையை உருவாக்க உறுதியேற்போம். திமுக ஆயிரம் காலத்து பயிர். தமிழ் மண்ணின் தனித்தன்மையை நிலைநாட்ட, நாளும் மக்கள் தொண்டு ஆற்றிடுவோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x