Published : 30 Sep 2024 04:04 AM
Last Updated : 30 Sep 2024 04:04 AM

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: யாருக்கு என்ன துறை?

சென்னை: ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2021 மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று,துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக ஆளுநர்மாளிகை அறிவித்தது. அந்த வகையில், அமைச்சரவை 5-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் இருந்துகே.ராமச்சந்திரன் (சுற்றுலா), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினர் நலன்), மனோ தங்கராஜ் (பால்வளம்) ஆகிய 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் (ஆவடி), அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீனில் வந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (கரூர்) ஆகிய இருவரும் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு கொறடாவாக இருந்த கோவி.செழியன் (திருவிடைமருதூர்), ஆர்.ராஜேந்திரன் (சேலம் வடக்கு) ஆகிய இருவரும் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில்புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன்உள்ளிட்ட எம்.பி.க்கள், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட முதல்வர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), முத்தரசன் (இந்திய கம்யூ.), திருமாவளவன் (விசிக), ஜவாஹிருல்லா (மமக), முகமது அபுபக்கர் (ஐயுஎம்எல்), வேல்முருகன் (தவாக)உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழா 15 நிமிடங்களில் முடிந்தது.பின்னர், அமைச்சர்கள் மெரினாசென்று அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். துறைகள் ஒதுக்கப்பட்டநிலையில், புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்கின்றனர்.

யாருக்கு என்ன துறை? - செந்தில் பாலாஜியிடம் ஏற்கெனவே இருந்த மின்சாரம், மதுவிலக்கு - ஆயத்தீர்வை ஆகிய துறைகளே அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. நாசருக்கு சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை, ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறை, கோவி.செழியனுக்கு உயர்கல்வி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன், புதிய அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x