Published : 01 Jun 2018 08:04 AM
Last Updated : 01 Jun 2018 08:04 AM
போராட்டமே வேண்டாம் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போகக் கூடாது என்றுதான் சொன்னார் என ‘காலா’ பட இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’திரைப்படம் வரும் 7-ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், பாடல் கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதிகம் பேர் பார்த்த வகையில், சாதனையும் படைத்துள்ளது. மும்பை தாராவி பகுதியில் நடக்கும் நில உரிமைப் போராட்டத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள் ளது.
இந்த சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர் நல்லதுக்காகப் போராடுகிறார்கள். சிலர் போராட்டங்களை ஊக்குவிக்கிறார்கள். தமிழகம் போராட்ட பூமி போல இருந்தால் இங்கு எந்தத் தொழிலும் வராது. வேலைவாய்ப்பு கிடைக்காது. இளைஞர்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். எனவே, போராட்டம் நடத்தும்போது ரொம்ப ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘‘எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போய்க் கொண்டிருந்தால் நாடே சுடுகாடாகிவிடும்’’ என்றார்.
திரைப்படத்தில் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசும் ரஜினி, நிஜத்தில் போராட்டத்துக்கு எதிராகப் பேசுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘காலா’ படத்தின் இயக்குநரான பா. இரஞ்சித் நேற்று மதுரை வந்தார். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் ஒரு பிரிவினர் மீது நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மோதலில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். தாக்குதலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார்.
தூத்துக்குடியில் ரஜினி தெரிவித்த கருத்துகள் குறித்து இரஞ்சித்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
ரஜினியுடன் பேசினேன்
இன்று காலையில்கூட ரஜினியிடம் போனில் பேசினேன். அவர் போராட்டமே வேண்டாம் என்று சொல்லவில்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்று போகக் கூடாது என்பதைத்தான் சொன்னார். போராட்டம் நடத்தினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்றால், போராடித்தான் ஆக வேண்டும். ரஜினியும் இதே கருத்து கொண்டவர்தான். இதனால்தான் இந்த மக்களின் போராட்டத்தில் நானும் பங்கேற்றுள்ளேன். தூத்துக்குடி மக்களின் வலியை அறிந்தபிறகு, ரஜினி அதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு பா. இரஞ்சித் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT