Published : 30 Sep 2024 05:30 AM
Last Updated : 30 Sep 2024 05:30 AM
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி உயர்த்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்விளைவாக, இது தொடர்பான தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றியுள்ளது. இதேபோன்று பிற உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும். திமுக அரசின் இந்தச் செயல் கடும்கண்டனத்துக்குரியது.
இந்த சொத்து வரி உயர்வின் மூலம் வீட்டின் உரிமையாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, வாடகைக்கு இருப்போரும் கூடுதல் வாடகை செலுத்த நேரிடும். இது மட்டுமல்லாமல், குடிநீர் வரியும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வணிக மின் பயன்பாட்டு நுகர்வோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு ‘சக்தி காரணி’அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ‘சக்தி காரணி’யை சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் பராமரிக்க வேண்டும் என்றிருந்த நிலையில், அனைத்து வணிக மின் உபயோகிப்பாளர்களும் இதனை பராமரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த ஜூலைமாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில், ‘சக்தி காரணி’யை பராமரிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ளது. இதன் விளைவாக, 2 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம்என்றிருந்த மின் கட்டணம், தற்போது அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ.15 ஆயிரம் அளவுக்குவந்திருக்கிறது.
மக்கள் நலனில் அக்கறையில்லை: இதுகுறித்து மக்களின் கருத்தை கேட்காமலேயே தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் இதுபோன்ற அபராதத்தைவிதித்திருப்பதன் மூலம், மக்களிடம் இருந்து எப்படி கட்டணத்தை வசூலிக்கலாம் என்பதில்தான் அரசு குறியாக இருக்கிறது, மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை என்பது தெளிவாகிறது.
பொது மக்கள் படும் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்காண்டு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். வணிக மின் பயன்பாட்டாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ‘சக்தி காரணி’ அபராதத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT