Published : 11 Jun 2018 07:55 AM
Last Updated : 11 Jun 2018 07:55 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற வழிகாட்டு நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர். இதில் பேசிய ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி, உயர்ந்த குறிக்கோள், விடாமுயற்சி, ஒழுக்கம் ஆகியவை வெற்றியைத் தேடித் தரும் என்று கூறி, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை யூட்டினார்.
மாணவர்களின் ஐஏஎஸ் கனவை நனவாக்க உதவவும், மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கி, அவர்களிடமுள்ள தயக்கங்களைத் துடைத்தெறியவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி பேசும்போது, ‘மாணவர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற வெறி அவசியம். உயர்ந்த குறிக்கோள், நல்ல சிந்தனை, விடாமுயற்சி, ஒழுக்கம் ஆகியவை வெற்றியைத் தேடித் தரும். மனதைக் கட்டுப்படுத்தி, நல்ல புத்தகங்களை தொடர்ந்து படிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நேரத்தை வீணாக்கிவிடக் கூடாது. கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோரை மதிக்க வேண்டும்' என்றார்.
நேர மேலாண்மை
பொள்ளாச்சி சார் ஆட்சியர் பா.காயத்ரி கிருஷ்ணன்: மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். சிறந்த முறையில் தேர்வுக்குத் தயாராவதுடன், நேர்மறையான எண்ணங்களுடன் தேர்வை அணுக வேண்டும். நாளிதழ்களை தவறாது படிக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளை தெரிந்துவைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிர்மறையான அணுகுமுறை கூடாது. குறைகளைச் சுட்டிக்காட்டுபவராக இல்லாமல், அவற்றுக்கான தீர்வுகளை காண்பவராக மாற வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணியில் சேருவதன் மூலம் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதற்கு சமூகப் பொறுப்பு மிகவும் முக்கியமானது. சாதாரணமாகப் பயிலும் மாணவர்கள்கூட கடின உழைப்பால் சாதனையாளராக மாறலாம். நேர மேலாண்மை வெற்றிக்கு கைகொடுக்கும்.
ஐ.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்ற பிரவீன்: மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுக்கு கவனமுடன் தயாராக வேண்டும். அதேசமயம், உடலை வருத்திப் படிக்கத் தேவையில்லை. தெளிவான சிந்தனையுடன், மனதில் பதியும்படி படித்தாலே அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எளிதில் வெல்லலாம். நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க வேண்டும்.
நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை முதன்மை வர்த்தக அலுவலர் சுவாதி ரோஹித், ‘தி இந்து' குழும பொது மேலாளர் டி.ராஜ்குமார், விஜயா பதிப்பகம் உரிமையாளர் மு.வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘தி இந்து’ தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ், நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, அனைத்துத் தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
மாணவர்கள் உற்சாகம்
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர். மாணவிகள் கூறியதாவது:
பி.லேகா: மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுகள் குறித்தும், அவற்றில் பங்கேற்பது குறித்தும் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இதற்காக ‘தி இந்து தமிழ்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.பவித்ரா: நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பயனடையும் வகையில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்' நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஐஏஎஸ் தேர்வுக்கு அதிக செலவாகுமோ, தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது போன்ற சந்தேகங்களுக்கெல் லாம் விடைகாணும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
'தி இந்து உதவியாக இருந்தது'
வருமான வரித் துறை இணை ஆணையர் வி.நந்தகுமார்: சிறுவயதில் நான் கற்றல் குறைபாடு கொண்டவனாக இருந்தேன். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றேன். ஆனால், ஆளுமைத் திறன் உதவியுடன் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. தேர்வுக்குத் தயாரானபோது 'தி இந்து' நாளிதழ் மிகவும் உதவியாக இருந்தது. இலக்கை நோக்கிய பயணமும், ஆளுமைத் திறனும் வெற்றியைத்தேடித் தரும்.
‘பத்திரிகை வாசிப்பு ஒரு சமூகக் கடமை'
‘தி இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ்: அன்றாடம் பத்திரிகை வாசிப்பது என்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டும் அல்ல. அடிப்படையில் அது ஒரு சமூகக் கடமை. நேற்றைய தினம் என்னைச் சுற்றியுள்ளோருக்கு, என் சமூகத்தினருக்கு என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முற்படும் ஆர்வம் முக்கியமானது. சமூகத்தோடு நமக்குள்ள பிணைப்பின் வெளிப்பாடு என்றும் இதைக் கூறலாம். செய்திகளைத் தர எவ்வளவோ ஊடகங்கள் இருக்கலாம். வாசிப்பின் வழியே நிதானத்தைக் கற்றுத்தர பத்திரிகைகள் மட்டுமே இருக்கின்றன. நிதான வாசிப்புக்கும், நிதான வாழ்க்கைக்கும் முக்கியமான உறவுண்டு. தமிழ்ச் சூழலில் நிதான வாசிப்பை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறது 'தி இந்து தமிழ்' நாளிதழ்.
‘கனவை நனவாக்கும் படிக்கட்டுகள்'
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன்:
ஐஏஎஸ் படிப்பு, கனவுடன் நின்றுவிடக்கூடாது. தொடர் பயிற்சி, கடின உழைப்பு, விடாமுயற்சி, திட்டமிடல் ஆகிய படிக்கட்டுகள் வழியே இந்தக் கனவை நனவாக்கலாம். நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களுக்கும் ஐஏஎஸ் கற்க பல்வேறு வசதி வாய்ப்புகள் வந்துவிட்டன. ‘தி இந்து' தமிழ் நாளிதழுடன் இணைந்து 15-வது முறையாக ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியை கிங் மேக்கர்ஸ் அகாடமி நடத்தியுள்ளது. ஏறத்தாழ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடையே ஐஏஎஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தேர்வுக்குத் தயாராக்கியுள்ளோம்.
‘சமூக மேம்பாட்டில் அக்கறை தேவை'
கோவை மாநகராட்சி ஆணையர், தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன்: பிறருக்காக கல்வி கற்கவோ, தேர்வுகளில் பங்கேற்கவோ கூடாது. நமது சுய விருப்பம்தான் முக்கியம். சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது. சமூக மேம்பாட்டில் அக்கறையுடன், சிக்கல், சவால்களைக் கடந்து சாதிக்க வேண்டும். புகார் கூறுபவராக மட்டும் இருக்காமல், தீர்வுகாண்பவராக உருவாக வேண்டும். இன்டர்நெட் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT