Published : 29 Sep 2024 05:18 PM
Last Updated : 29 Sep 2024 05:18 PM
சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு!
இதுதவிர, குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ராமசந்திரன் அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில், செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர், கோவி.செழியன் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர், அதிகாரிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ரா. முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
3 நாட்களில் அமைச்சரான செந்தில் பாலாஜி: கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. பணமோசடி வழக்கில் மூன்று நாள்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்த அவர், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதை எதிர்க்கட்சிக்ளை சாடி வருகின்றன.
துணை முதல்வர் உதயநிதி: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். சனாதன ஒழிப்பை ஒரு ஆயுதமாக மாற்றி பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கொண்டு சென்றது, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கல் விஷயத்தை கையில் எடுத்து பேசி பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்தது. விமர்சனங்களுக்கு மத்தியில் பார்முலா 4 கார் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற போது ஆட்சி நிர்வாகத்தை சிறப்பாக கவனித்துக்கொண்டது என பல்வேறு நற்பெயரையும் சம்பாதித்துள்ளார்.
அதே வேளையில் வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் வருகின்றனர். அதற்கு பதிலளித்திருக்கும் அவர், “என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT