Last Updated : 29 Sep, 2024 03:58 PM

2  

Published : 29 Sep 2024 03:58 PM
Last Updated : 29 Sep 2024 03:58 PM

சேதுபதி மன்னர் வழித்தோன்றல்கள் சிறப்பு ஓய்வூதியம் குறைப்பு: மறுபரிசீலனைக்கு வலியுறுத்தல்

மன்னர் ரிபல் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மக்கள் நலச்சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன்

மதுரை: மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றதல்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியத்தில் ரூ.4 ஆயிரம் குறைக்கப்பட்டதை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மன்னர் ரிபல் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மக்கள் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பங்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சோதுபதியின் வழித்தோன்றல்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 91 பேருக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த ஓய்வூதியம் 49 பேருக்கு வழங்கப்படுகிறது.

இவர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் கடந்த 2021-ல் ரூ.10 ஆயிரமாகவும், 2023-ல் ரூ.11 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் வரை மாதம் ரூ.11 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த செப்டம்பர் மாதம் முதல் தேதியில் சேதுபதி மன்னரின் வழித்தோன்றல்களின் ஓய்வூதிய கணக்கில் ரூ.11 ஆயிரத்துக்கு பதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தில் ரூ.4 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேதுபதி மன்னரின் வாரிசுகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னர் ரிபல் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மக்கள் நலச்சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தியாகிகளின் வாரிசுகளுக்கான ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.11500 ஆக உயர்த்தப்படும் என நினைத்திருந்தோம்.

ஆனால் செப்டம்பர் மாதம் வரவு வைக்கப்பட்ட சிறப்பு ஓய்வூதியத்தில் சேதுபதி மன்னரின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் ரூ.4 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.7 ஆயிரம் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் கருவூலக அதிகாரிகளிடம் விசாரித்த போது, அரசின் நிதிநிலை சரியில்லை, தவறான கணக்கீடு அடிப்படையில் கூடுதலாக பணம் வழங்கப்பட்டுள்ளது, இதனால் மாதம் ரூ.ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கான தொகையை 3 தவனையாக பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இது எந்த வகையிலும் நியாயமற்றது.

சேதுபதி மன்னரின் வழித்தோன்றல்களுக்கு மட்டுமே ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்து சேதுபதி மன்னரின் வழித்தோன்றல்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியத்தில் எவ்வித பிடித்தமும் செய்யாமல், ஓய்வூதியத்தை மேலும் உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x