Published : 29 Sep 2024 12:17 PM
Last Updated : 29 Sep 2024 12:17 PM
சென்னை: 15 ஆண்டுகளைக் கடந்த, சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் இயக்கி மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. உடனடியாக அவற்றை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6247 அரசு ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்ட அந்த ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சாலைகளில் இயக்கத்த குதியற்ற பேருந்துகளை தொடர்ந்து இயக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.
வணிகப் பயன்பாட்டுக்கான ஊர்திகளை 15 ஆண்டுகளிலும், தனிநபர் பயன்பாட்டுக்கான ஊர்திகளை 20 ஆண்டுகளிலும் செயல்பாட்டிலிருந்து நீக்கும் திட்டத்தை கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த போதே அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகளும், 2500 பிற அரசு ஊர்திகளும் 15 ஆண்டுகளைக் கடந்தவையாக இருந்ததால், அவற்றை மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு கூடுதலாக இயக்கத் தமிழக அரசு உரிமம் வழங்கியிருந்தது.
மத்திய அரசிடம் கூடுதலாகப் பெறப்பட்ட ஒன்றரை ஆண்டு காலக்கெடுவுக்குள் 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து ஊர்திகளையும் நீக்கி விட்டு புதிய ஊர்திகளை அரசு வாங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதால் ஏற்கெனவே உரிமம் நீட்டிக்கப்பட்ட 4000 ஊர்திகளுடன், புதிதாக 15 ஆண்டுகளைக் கடந்த மேலும் 2247 ஊர்திகளுக்கும் சேர்த்து காலாவதி காலத்தைக் கடந்து இயக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த ஊர்திகள் இயக்கப்படாவிட்டால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது உண்மையும் இல்லை.
தமிழ்நாடு அரசு கொள்கையின்படி அரசுப் பேருந்துகள் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய பிறகும், அரசு விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய பிறகும் மாற்றப்பட வேண்டும். ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அரசுப் பேருந்துகளின் பயன்பாட்டுக் காலம் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்றும், அரசு விரைவுப் பேருந்துகளுக்கு 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்றும் நீட்டிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளை அதிக அளவாக 7 ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளையும், 16 ஆண்டுகளுக்கும் அதிக காலத்தையும் கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?
15 ஆண்டுகளைக் கடந்த வணிகப் பயன்பாடு ஊர்திகளை கழிவு செய்யும் திட்டம் பல ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகள் ஆன ஊர்திகளை நீக்குவதற்கு நான்காண்டுகளுக்கு முன்பிருந்தே அரசு தயாராகியிருக்க வேண்டும். அதையும் கடந்து 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசுப் பேருந்துகளின் வாழ்நாள் 6 ஆண்டுகள் தான். அதன்படி பார்த்தால் இப்போது 15 ஆண்டுகளைக் கடந்த சுமார் 2000 பேருந்துகள் உள்ளிட்ட 6247 அரசு ஊர்திகளையும் படிப்படியாக கழிவு செய்யும் பணிகளை குறைந்தது பத்தாண்டுகளுக்கு முன்பே அரசு தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அதை செய்யத் தவறி விட்ட தமிழக அரசு, மக்களின் வாழ்வாதாரம் கருதித் தான் காலாவதியான பேருந்துகளை இயக்க வேண்டியிருப்பதாக தமிழக அரசு கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் விதம் அனைத்துத் தரப்பினரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
பேருந்துகளின் சக்கரங்கள் கழன்று தனியாக ஓடுவது, வழியில் பேருந்து பழுதாகி நிற்பது, பேருந்தின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்படுவது, ஓடும் பேருந்தில் அமர்ந்திருக்கும் நடத்துனர் இருக்கையுடன் வெளியில் தூக்கி வீசப்படுவது, மழை பெய்தால் பேருந்து முழுவதும் ஒழுகுவது போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.
நேற்று முன்நாள் கூட குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் காரணம் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது தான்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவற்றில் 1088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட புதிய பேருந்துகள் அனைத்தும் வாங்கப்பட்டிருந்தால் காலாவதியான பேருந்துகளையே மீண்டும், மீண்டும் உரிமத்தை புதுப்பித்து இயக்க வேண்டியத் தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்காது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இன்று எதிர்கொண்டு வரும் அனைத்துச் சிக்கல்களுக்கும் தமிழக அரசு தான் காரணமாகும்.
15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளும், பிற ஊர்திகளும் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, பயணிகளின் உயிர்களுக்கும், சாலையில் பயணிப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்ப்களை ஏற்படுத்துகின்றன. 15 ஆண்டுகளைக் கடந்த, சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் இயக்கி மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது.
இவற்றைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளையும், ஊர்திகளையும் வாங்கி தமிழக அரசு இயக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT