Published : 29 Sep 2024 10:01 AM
Last Updated : 29 Sep 2024 10:01 AM

மாநாட்டுக்கு மாவட்டவாரியாக சென்று தொண்டர்களுக்கு அழைப்பு: தவெக பொது செயலாளர் ஆனந்த் தகவல்

கோப்புப்படம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாட்டுக்கு வருமாறு மாவட்டம்தோறும் நேரடியாகச் சென்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27-ம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கட்சி தலைமை நிர்வாகிகள் முதல் அனைத்து நிலை உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாநாட்டுக்கு தொண்டர்களை அழைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைப்புரீதியான மாவட்டங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், சென்னையில் மாவட்டத் தலைவர்கள் தாமு, தி.நகர் அப்புனு ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் ஆனந்த்பங்கேற்று, மாநாடு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஒன்றியம் நகரம், வட்டம், கிளை அளவில் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க உள்ளேன். அந்த வகையில் 29-ம் தேதி (இன்று) அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், திருவாரூர், திருச்சி என ஒரே நாளில் 5 இடங்களுக்குச் சென்று மாநாட்டுக்கு வர வேண்டும் என அழைக்க இருக்கிறேன்.

கட்சித் தலைவரின் பெயரைகளங்கப்படுத்தாத வகையில் எவ்வாறு ஒழுக்கமுடன் மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதெல்லாம் தொண்டர்களுக்குத் தெரியும். வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே தொண்டர்கள் வர வேண்டும். வெகுதூரத்தில் இருந்து வருவோர் மோட்டார் சைக்கிள் போன்றவற்றின் மூலம் வர வேண்டாம்.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது. பிற்பகல் 2 மணிக்குள்ளாக மாநாட்டுக்கு வர வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து திரும்ப வேண்டும். மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள 25 குழுக்கள் நியமிக்க இருக்கிறோம். அனைத்து மாவட்டத்தின் நிர்வாகிகளுக்கும் பதவிகள் இருக்கும்.

மாநாட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து அனைவரும் தலைமைக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம். எந்த உதவியானாலும் கேட்கலாம். செய்து கொடுக்க தலைமை தயாராக இருக்கிறது. கட்சித் தலைவர் விஜய் நேரடியாக மாநாட்டுக்கு அழைத்ததாகக் கருதி அனைவரும் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருகை தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x