Published : 28 Sep 2024 07:48 PM
Last Updated : 28 Sep 2024 07:48 PM
காஞ்சிபுரம்: “2017-ல் காவிரி பிரச்சினைக்காக உருவாக்கப்பட்ட இந்த அணியை இன்று வரை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். இந்த அணி ஒன்றும் தேர்தலுக்காகவோ, தேர்தல் காலத்திலோ உருவாக்கப்பட்ட அணி அல்ல. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்னென்றைக்கும், மூன்றாவது குழலாக திமுகவுடன் இருக்கும். தொடர்ந்து களத்தில் சனாதன சக்திகளுக்கு எதிராக உங்களுடன் சேர்ந்து முழங்குவோம்” என்று திமுக பவள விழா கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “திராவிட கட்சியின் மூன்றாவது குழல்தான் விசிக என ஒருமுறை கருணாநிதி முன்னிலையில் கீ.வீரமணி குறிப்பிட்டார். அந்த வகையில் மூன்றாவது குழலாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பேரியக்கம் திமுக. அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்துடன் வீறு கொண்டு வெற்றி நடை போடும் இயக்கமாக 6-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.
சமூக நீதி இயக்கமாக திமுக செயல்படுகிறது. பெரியார் வழியில் அறிஞர் அண்ணா மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தினார் அண்ணா. இந்தி திணிப்பை எதிர்த்தார் கருணாநிதி. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் அதனை ஏற்கமாட்டோம் என்றார் மு.க.ஸ்டாலின். அதனால் தான் நேற்று பிரதமரை சந்தித்தார் ஸ்டாலின். கருணாநிதி கூட அறிவிக்காத ‘திராவிட மாடல்’ என்பதை மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்தினார்.
ஸ்டாலினை குடும்ப வாரிசு என்கிறார்கள்... அவர் கருத்தியல் வாரிசு. பெரியாரின் கொள்கை பேரன். பெரியார் வழியில் அவர் தொடர்ந்து இயங்குகிறார் என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. இந்திய அளவில் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்கம் திமுக. சமத்துவபுரம், குடிசை மாற்று வாரியம் என பல திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.
அரை நூற்றாண்டு காலம் கருணாநிதியை சுற்றிதான் இந்திய அரசியல் நடைபெற்றது. அவர் வழியில் வந்த ஸ்டாலின், 2019-ல் வெற்றி, 2021-ல் வெற்றி, 2024-ல் வெற்றி என வெற்றியை குவித்து வருகிறார். 2017-ல் காவிரி பிரச்சினைக்காக உருவாக்கப்பட்ட இந்த அணியை இன்றுவரை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். இந்த அணி ஒன்றும் தேர்தலுக்காகவோ, தேர்தல் காலத்திலோ உருவாக்கப்பட்ட அணி அல்ல. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தேர்தல் காலத்தில் உருவாகும் அணி தேர்தலுக்குப் பின் சிதறி போகும். ஆனால், இந்த அணி இன்றைக்கும் கட்டுக்கோப்பாக இயங்குகிறது என்றால், அதற்கு ஸ்டாலினின் ஆளுமைதான் காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்தால், பெரியார் பக்கத்தில் தாளமுத்துவும், நடராஜனும் நிற்பது போல மூவரின் திருவுருவச் சிலையை நிறுவுவோம் என அண்ணா சொன்னார். அது இன்னும் நிலுவையில் உள்ளது. அண்ணாவின் அந்த ஏக்கத்தை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி என்னென்றைக்கும், மூன்றாவது குழலாக திமுகவுடன் இருக்கும். தொடர்ந்து களத்தில் சனாதன சக்திகளுக்கு எதிராக உங்களுடன் சேர்ந்து முழங்குவோம்” என திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT