Published : 28 Sep 2024 03:56 PM
Last Updated : 28 Sep 2024 03:56 PM

சென்னையில் ‘மொபைல் வேன்கள்’ மூலம் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு

சென்னை: சென்னையில், நடமாடும் வேன்கள் மூலம் 19 இடங்களில் கிலோ ரூ. 35-க்கு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் சார்பில் ‘மொபைல் வேன்கள்’ எனப்படும் நடமாடும் ஊர்திகள் மூலமாக சில்லரை வணிகத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம் கடந்த செப்.5 தேதி டெல்லி மற்றும் மும்பையில் தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர், சென்னையில் 11-ம் தேதியும், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர், குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக பரபரப்பான சந்தைகள், குடியிருப்பு பகுதிகள், முக்கிய ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இந்த என்சிசிஎஃப் மொபைல் வேன்கள் நிறுத்தப்பட்டு, மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் சென்னையில் 19 இடங்களில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வெங்காயம், வெங்காய உற்பத்திக்கு பெயர் பெற்ற மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x