Published : 28 Sep 2024 03:16 PM
Last Updated : 28 Sep 2024 03:16 PM
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, நகர்ப்புற மக்களிடையே விற்பனை செய்யும் வகையில் ‘அபார்ட்மென்ட் பஜார்’ எனும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாகவும், நகர்ப்புற மக்கள் மத்தியில் அவற்றை பிரபலப்படுத்தும் வகையிலும், 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்காட்சிகள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், படூரில் உள்ள ஹீராநந்தானி அடுக்குமாடி குடியிருப்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் வகையில் அபார்ட்மென்ட் பஜார் நேற்று (செப்.27) தொடங்கப்பட்டது. 2 நாட்கள் நடைபெறும் இந்த அபார்ட்மென்ட் பஜாரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை கூடாரங்கள் அமைத்து அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
மொத்தம் 20 அரங்குகள் அமைக்கப்பட்டு, அவற்றில் நவராத்திரி பண்டிகைக்குத் தேவையான கொலு பொம்மைகள், பூஜை பொருட்கள், பரிசுப் பொருட்கள், பாரம்பரிய அரசி வகைகள், கைவினைப் பொருட்கள், கைத்தறி துணி வகைகள் போன்ற அனைத்து வகையான பொருட்களும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிகழ்வின் போது அபார்ட்மென்ட்வாசிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT