Published : 28 Sep 2024 10:42 AM
Last Updated : 28 Sep 2024 10:42 AM

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மதுரையில் அக்.9-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்: இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மதுரையில் அக்.9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் பணி இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள்.தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்களின் கல்விக் கடனை, அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும், என்பது உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.100 நாள் ஊரக வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்.அதிமுக ஆட்சிக் காலம்வரை 52 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலினின் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

‘தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்’ மற்றும் ‘வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம்’ முதலானவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரத்து செய்ததை மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்த 40 மாத காலத்தில், போதைப் பொருட்களின் பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் சமூக விரோத குற்றங்களையும் தடுக்கத் தவறி தமிழகத்தை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றியுள்ள அவல நிலையை நாட்டு மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டிடவும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஸ்டாலினின் திமுக அரசு முல்லைப் பெரியாறு பேபி அணையை பலப்படுத்தி, உச்சநீதிமன்ற ஆணைப்படி 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க முறையான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும்,

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகள், வேலை வாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், அதிமுக சார்பில் அக்.9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், எம்ஜிஆர் திடலில் கழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் மு. ராஜூ, ஆகியோர் துவக்கி வைப்பார்கள், நத்தம் விசுவநாதன், ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, ஆகியோர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவினரும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x