Published : 28 Sep 2024 09:14 AM
Last Updated : 28 Sep 2024 09:14 AM
சென்னை: “மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் இயற்கை விவசாயி பாப்பம்மாளைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன. அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன. அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாளுக்கு என் அஞ்சலி.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள் நேற்றுறு (செப்.27) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 108
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்தார். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இவர் ஆற்றி வந்த சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு மூதாட்டி பாப்பம்மாளுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக சார்பில் ‘பெரியார் விருது’ மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தினமும் வயல்வெளிக்குச் சென்று இயற்கை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வயோதிகத்தின் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு படுத்த படுக்கையானார். படுக்கையில் இருந்தபடியே உணவுகளை, மருந்துகளை எடுத்து வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்நிலையில், இன்று (செப்.27) இரவு தனது வயோதிக்கத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT