Published : 28 Sep 2024 09:13 AM
Last Updated : 28 Sep 2024 09:13 AM

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில், சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக் கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம். இதற்கு நிதித்துறை உரிய அனுமதி அளித்துள்ளது என்று கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு 10, 12-ம் வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. கடந்த கல்வியாண்டு வரையில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இந்த வகுப்பினர் பொதுத் தேர்வுகளை எழுதி வந்தனர். நடப்பு கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்புகள் வரையில் அனைத்து வகுப்புகளும் முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின், சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் தொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் கடந்த 26-ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், “10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இக்கு புதுச்சேரி அரசு செலுத்தும் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசிநாள் வரும் அக்டோபர் 4-ம் தேதியாக உள்ளது. இதை செலுத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இதில் ஆளுநர், முதல்வர் தலையிட வேண்டும் " என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான செய்தி நமது நாளிதழில் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி நேற்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தேர்வுக் கட்டணம் தொடர்பாக சிபிஎஸ்இ சுற்றறிக்கை கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது. தேர்வுக் கட்டணத் தொகையானது நடப்பு 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 26-ம் தேதி தேர்வுக் கட்டணம் மற்றும் செலவின அனுமதிக்கு நிதித்துறை பட்ஜெட் அதிகாரி ஒப்புதல் அளித்துள்ளார். மாணவர்களுக்கு சரியான நேரத்தில் தேர்வுக் கட்டணத்தை செலுத்துவோம். இது கல்வித்துறையின் பொறுப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x