Published : 28 Sep 2024 08:54 AM
Last Updated : 28 Sep 2024 08:54 AM
சென்னை: “கடந்த 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு சென்னை மாநகராட்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு. எனவே சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி சம்பந்தமான தீர்மானத்தை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக திமுக அரசு மாநில மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றும் விதமாக வரியை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். காரணம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வழிகளில் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி மக்களை பொருளாதார சிரமத்துக்கு உட்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. இது நியாயமில்லை. குறிப்பாக ஏற்கனவே சொத்து வரி, வீட்டு வரியை உயர்த்திய பிறகு இப்போது சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை 6 % உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல.
கடந்த 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு சென்னை மாநகராட்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு காரணம் மாநில அரசு சார்பில் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு பணிகளுக்கு சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வருமானத்தை மீறிய செலவுகளுக்கும், விலைவாசி உயர்வுக்கும் தமிழக அரசின் வரி உயர்வும் காரணம் என்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர். மேலும் மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பால் விலை உயர்வு, பால் பொருட்களின் விலை உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வரியை உயர்த்துவதால் பொருளாதாரத்தில் சிரமத்தில் இருக்கின்ற தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். எனவே தமிழக அரசு சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி சம்பந்தமான தீர்மானத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கவும், தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றும் நடவடிக்கைகளில் இனி ஈடுபட வேண்டாம் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT