Published : 28 Sep 2024 04:29 AM
Last Updated : 28 Sep 2024 04:29 AM
மெம்பிஸ்: அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில்உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயில் மற்றும் இந்திய கலாச்சாரமையத்தில் ஊத்துக்காடு வேங்கடகவி கலை விழா விமரிசையாக நடந்தது. ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர்.
கடந்த 18-ம் நூற்றாண்டில் தமிழ்,சம்ஸ்கிருதத்தில் இறைவனை துதிக்கும் ஏராளமான சாகித்யங்களை இயற்றியவர் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். ‘அலைபாயுதே கண்ணா’, ‘ஆடாது அசங்காது வா’ போன்ற இவரது கீர்த்தனைகள் கர்னாடக இசை, நாட்டிய உலகில்மிகவும் பிரபலமானவை. இவரைபோற்றும் விதமாக, அமெரிக்காவின் மெம்பிஸ் நகரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயில் மற்றும் இந்திய கலாச்சார மையத்தில் ‘ஊத்துக்காடு வேங்கடகவி கலை விழா’ சமீபத்தில் நடைபெற்றது.
இதில், அமெரிக்காவின் நியூயார்க், மிச்சிகன், இலினாய்ஸ், விஸ்கான்ஸின் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம் கர்னாடக இசைக் கலைஞர்கள் தனித்தனியாக ஊத்துக்காடு வேங்கடகவியின் சாகித்யங்களை ஸ்ருதிசுத்தமாக பாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர். விஸ்கான்ஸின் பகுதியை சேர்ந்த மூத்த கர்னாடக இசைக் கலைஞர் வனிதா சுரேஷ், பிரபல கர்னாடக இசைப் பாடகியும், சித்ரவீணை கலைஞருமான பார்கவி பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் இணைந்து, பங்கேற்கும் கலைஞர்கள், இடம்பெறும் பாடல்களை தேர்வு செய்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
சியாட்டலில் இருந்து பிரமீளா, அட்லான்டாவில் இருந்து பிரசன்னா, பெங்களூரு சவும்யா, பார்கவி பாலசுப்ரமணியம் மற்றும் அமெரிக்கா வாழ் அவரது சிஷ்யைகள் பலர் தனித்தனியே கச்சேரி செய்தனர். தனிநபர் கச்சேரிகளை தொடர்ந்து, அனைத்து கலைஞர்களும் ஒன்றுகூடி, ஸ்ரீவேங்கடகவிக்கு ஓர் இசைமாலையாக சமர்ப்பித்தனர். சித்ரவீணை ரவிகிரணின் கச்சேரி, விழாவுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
வேங்கடகவி, அன்னமாச்சார்யா, புரந்தரதாசர், சுவாதி திருநாள் ஆகியோரது சாகித்யங்களுடன், எம்.டி.ராமநாதன் உள்ளிட்டோரின் பாடல்களை, இசைக்கலைஞர்கள் புதிய அணுகுமுறையோடு பாடியும் வாத்தியங்களில் வாசித்தும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கினர். நிறைவாக, வாஷிங்டன் வாழ் குச்சிப்பிடி கலைஞர் டாக்டர் யாமினி, ஆரபி ராகத்தில் அமைந்த வேங்கடகவியின் ‘மரகத மணிமய’ எனும் கண்ணனின் பாடலின் சிறப்பை, நடனத்தில் தன்னுடைய அபாரமான அபிநயங்களில் வெளிப்படுத்தினார்.
டாக்டர் பிரசாத், டாக்டர் விஜயாஆகியோர் அனைத்து கலைஞர்களையும் பாராட்டி கவுரவித்தனர். மெம்பிஸ் கலாச்சார மையத்தின் தலைவர் விஜயா, துணை தலைவர் டாக்டர் பிரசாத் துகிராலா, மையத்தின் உறுப்பினர்கள் முரளி ராகவன்,ரஜனி பகடாலா, பாலாஜி, செந்தில் கண்ணன், பாண்டியன் ஆகியோர் இதர ஏற்பாடுகள், ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு விழா சிறப்புற காரணமாக இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT