Published : 28 Sep 2024 05:38 AM
Last Updated : 28 Sep 2024 05:38 AM

திருப்பூருக்குள் தொடர்ந்து ஊடுருவும் வங்கதேசத்தினர்: 4 ஆண்டுகளில் 100 போலி ஆதார் தயாரித்த தரகரிடம் விசாரணை

மாரிமுத்து

திருப்பூர்: உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் போலியாக 100 ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த தரகரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த தரகர் மாரிமுத்து (43) என்பவர், போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர், பல ஆண்டுகளாக, எந்தஆவணங்களுமின்றி ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளைப் பெற்றுத்தந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸார் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்லும் மாரிமுத்து, பலருக்கும் மனு எழுதிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, திருப்பூர் வருபவர்களுக்கு எந்த ஆவணங்களுமின்றி ஆதார் அட்டைகளை தயார் செய்து அளித்துள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பெற்றுள்ளார்.

அரசு மருத்துவருக்கு தொடர்பு? ஆதாருக்குத் தேவையான இருப்பிடச் சான்றை இணைப்பதற்காக, பல்லடத்தில் உள்ள அரசுமருத்துவர் ஒருவரின் கடிதத்தைஇணைத்துக் கொடுத்துள்ளார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆதார் பெற்றுத்தர அதிக தொகை வசூலித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை மாரிமுத்து பெற்றுத் தந்துள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், திருப்பூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

இ-சேவை மைய ஊழியர்கள்கூறும்போது, “ஆதார் அட்டை பெறுவது தொடர்பாக, இணையத்தில் பல்வேறு விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவுஎளிதாக யாரும் ஆதார் அட்டை பெற முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றைக் கொண்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர் அடையாளர் அட்டை ஆவணத்தை மட்டும் சரிபார்த்துக் கொள்ளலாம். மற்ற ஆவணங்களை சரிபார்க்க வாய்ப்பில்லை.

ஆதார் மைய ஊழியர்கள் தொகுப்பூதியப் பணியாளர்கள். அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால், தரகர்களுடன் இணைந்து செயல்பட முடியும். இவர்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது வேறு இடங்களுக்கு மாற்றினால் மட்டுமே, முறைகேடுகளைத் தடுக்க முடியும். மாரிமுத்து விவகாரத்தில், வேறு பலரும் இருக்கக்கூடும். இருப்பிடச் சான்று வழங்கிய அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடமும் விசாரித்தால் உண்மை தெரியவரும்" என்றனர்.

மாநகர காவல் ஆணையர் லட்சுமி கூறும்போது, "போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர். மாரிமுத்து யாருக்கெல்லாம் ஆதார் அட்டை வாங்கித் தந்துள்ளார் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். ஆதாருக்கு இருப்பிடச் சான்று அளித்த அரசு மருத்துவரையும் விசாரிக்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x