Last Updated : 02 Jun, 2018 09:47 AM

 

Published : 02 Jun 2018 09:47 AM
Last Updated : 02 Jun 2018 09:47 AM

மாமல்லபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில் நவீன வசதி களுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உட்பட பல்வேறு குடவரை சிற்பங்களைக் கண்டு ரசிப்பதற்காக வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

கடற்கரை கோயில் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் தென்னங்கீற்றுகளால் அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள், குடில்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

இதனால், உள்ளூர் உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்கள் ஓலைகளால் வேயப்பட்ட குடில்களை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், அங்கு பாதுகாப்பு அம்சங்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற கண்காணிப்புகள் இல்லை.

அந்தக் குடில்களில் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தால், 25 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றம் அல்லது 36 கி.மீ. தொலைவில் உள்ள சிறுசேரி பகுதியிலிருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டிய நிலை உள்ளது.

இதனால், உடனடியாகத் தீயை அணைக்க முடியாமல் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுகிறது. மேலும், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்குபவர்களை உடனடியாக மீட்பதற்கான, மீட்பு படையினரும் இல்லை.

எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாமல்ல புரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவகம் ஒன்றின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, தீயணைப்பு வாகனம் உடனடியாக வரமுடியாததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவி பெரிய விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஓலைகள் வேயப்பட்ட குடில்கள் அகற்றப்பட்டன. ஆனால், வெளிநாட்டு பயணிகள் இயற்கையான குடில்களை விரும்புவதால் மீண்டும் ஓலைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வெளிநாட்டினரின் பாதுகாப்பைக் கவனத்தில்கொண்டு மீட்புப்படை வீரர்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் சையத் முகம்மத்ஷா கூறும்போது: ‘‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மாமல்லபுரத்தில் தீயணைப்பு நிலைய அமைக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, மாமல்லபுரம் உட்பட வாலாஜாபாத், ஒரகடம் பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x