Published : 27 Sep 2024 11:47 PM
Last Updated : 27 Sep 2024 11:47 PM
கோவை: பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இயற்கை விவசாயியுமான கோவையைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள் இன்று (செப்.27) உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 108
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள். 108 வயதான இவர், கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வந்தார். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இவர் ஆற்றி வந்த சேவைகளை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு மூதாட்டி பாப்பம்மாளுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக சார்பில் ‘பெரியார் விருது’ மூதாட்டி பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
தினமும் வயல்வெளிக்குச் சென்று இயற்கை விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மாள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வயோதிகத்தின் காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு படுத்த படுக்கையானார். படுக்கையில் இருந்தபடியே உணவுகளை, மருந்துகளை எடுத்து வந்தார். அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்நிலையில், இன்று (செப்.27) இரவு தனது வயோதிக்கத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மூதாட்டி பாப்பம்மாள் உயிரிழந்த தகவலை அறிந்த ஊர் பெரியவர்கள், முக்கிய நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி ஆசி பெற்றார்: கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில், கோவையில் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வந்தார். கொடிசியா மைதானத்தில் பிரச்சாரக் கூட்டம் முடிந்ததும், மேடைக்கு பின்புறம் மூதாட்டி பாப்பம்மாளை பிரதமர் மோடி சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்றதற்கு அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பத்மஸ்ரீ விருது பெற்றவுடன் சென்னையில் முதல்வர் ஸ்டாலினையும் மூதாட்டி பாப்பம்மாள் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேனாவரம் என்ற இடத்திலிருந்து சிறுவயதிலேயே தேக்கம்பட்டிக்கு பெற்றோருடன் பாப்பம்மாள் குடி பெயர்ந்தார். தொடக்க காலத்தில் அவரது பெற்றோர் மளிகைக்கடை நடத்தி வந்தனர். அவர் 20 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
அந்த காலத்தில் 4 ஏக்கர் 29 சென்ட் இடத்தை ரூ.700-க்கு வாங்கி விவசாயப் பணியை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை ரூ.3 ஆயிரத்துக்கு வாங்கி விவசாயப் பணியை விரிவுபடுத்தினார். அதன் பின்னர், கடந்த சில ஆண்டுகளாக இரண்டரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இயற்கை விவசாயியான இவர், வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் சென்று அங்கு வரும் விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் தொடர்பாக உரையாடியுள்ளார். மேலும், நேரடியாக அவர் விவசாயம் செய்யும் இடத்துக்கு வரும் பொதுமக்கள், மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்த வகுப்புகளை அவர் எடுத்துள்ளார்.
ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி வந்த அவர், பொறித்த உணவுகளை தவிருங்க. வேக வைத்த உணவுகளை சாப்பிடுங்க. நேரத்துக்கு சரியாக சாப்பிடுங்க என அனைவருக்கும் அறிவுறுத்துவார். தள்ளாத வயதிலும் தினமும் வீட்டிலிருந்து, சிறிது தூரம் தள்ளியுள்ள தோட்டத்துக்கு நடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆரம்பகாலம் முதலே திமுக உறுப்பினராக இருந்து வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT