Published : 27 Sep 2024 09:03 PM
Last Updated : 27 Sep 2024 09:03 PM

காலில் விழுந்து ஆசி... - முதல்வர் ஸ்டாலின் உடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

சென்னை: டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டெல்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை முதல் நபராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார். தொடர்ந்து முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, பின்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில், மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அமர்ந்து சிறிது நேரம் பேசினர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக , சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, 471 நாட்களாக புழல் சிறையில் இருந்த அவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். வாரத்தில் 2 நாட்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட 6 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர் மீண்டும் அமைச்சர் ஆவதில் சட்டபூர்வமாக எந்தச் சிக்கலும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சகோதரர் வி.செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறை என்பது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில்கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச்செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைப்பதன்மூலம் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தனர். ஆனால், முன்னிலும் உரம் பெற்றவராக சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது. உறுதி அதனினும் பெரிது” என்று குறிப்பிட்டிருந்தார்.

திமுக செய்தித் தொடர்பு துறை தலைவர் டிகேஎஸ்.இளங்கோவன் கூறும்போது, “செந்தில் பாலாஜி அமைச்சராக தடையில்லை என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்” என்றதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x