Published : 27 Sep 2024 07:42 PM
Last Updated : 27 Sep 2024 07:42 PM
சென்னை: “தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்,” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிஸ்கோ நிறுவனம் ஃபெளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொலைதொடர்புக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனத்தை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா இன்று (செப்.27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிஸ்கோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில், மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஸ்கோ நிறுவன செயல் துணைத் தலைவர் ஜீட்டு படேல் உட்பட பலர் பங்கேற்றனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், “உலக அளவிலான பொருளாதாரத்தை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உற்பத்தி பொருட்கள், தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளின் மையாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது,” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிலாளர் போராட்டம் தொடர்பாக யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் குழப்பம் உள்ளது. எங்களிடம்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்றும், ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற தயராக உள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்.
அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகவே உள்ளோம். விளையாட்டுத்துறையில் சிறப்பாக பணியாற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் கொடுத்தால் அவர் மேலும் சிறப்பாக பணியாற்றுவார்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். 15ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையின் ஊழியர்கள், தாங்கள் தொடங்கியுள்ள புதிய சங்கத்துக்கான அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேர பணி என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்.9-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT