Published : 27 Sep 2024 08:43 PM
Last Updated : 27 Sep 2024 08:43 PM

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறாரா? - திமுக ‘உள்ளரசியல்’ கணிப்புகள்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சில நிபந்தனைகள் குறிப்பிட்ட நிலையில், அமைச்சராக எந்தத் தடையும் சட்டபூர்வமாக இல்லை. இதனால், விரைவில் அவர் அமைச்சராகலாம் என கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் திமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, அவருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மின்சாரத் துறை ஆகிய இரு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.

செந்தில் பாலாஜி கைதானவுடன் அவரின் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இதனால், சிறையில் 243 நாட்கள் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய காரணமாக இருந்தது அவரின் அமைச்சர் பொறுப்பு. இந்த நிலையில்தான் பிப்ரவரி மாதம் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

காத்திருந்த அமைச்சரவை மாற்றம்: திமுகவில் பல மாதங்களாக பேசப்பட்டு வந்த அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போவதற்கு முக்கியமான காரணமாக செந்தில் பாலாஜியின் ஜாமீனும் சொல்லப்பட்டது. தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தடையில்லை. ஆகவே, விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

என்ன மாற்றம்? யார் உள்ளே... யார் வெளியே? - தமிழக அமைச்சரவையில் ஸ்டாலின் உட்பட 35 அமைச்சர்கள் இடம்பெறலாம். தற்போது 34 அமைச்சர்கள் இருக்கின்றனர். இதில் மேலும் ஒருவராக செந்தில் பாலாஜி இணைக்கப்படுவார். அவருக்கு ஏற்கெனவே வழங்கிய மின்சாரத் துறை வழங்கப்படலாம் என்னும் பேச்சு அடிபடுகிறது. இது தவிர, முன்பு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெறலாம் என தகவல் கசிந்துள்ளது. சீனியர்கள் மாற்றப்பட்டு புதிதாக ஜூனியர்கள் உள்ளே வருவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளதாகப் பேசப்படுகிறது.

அத்துடன், திமுகவுக்குள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட துணை முதல்வர் அறிவிப்பு இத்துடன் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, அக்டோபர் முதல் வாரத்தில் இந்த மாற்றங்கள் நடக்கலாம் எனக் கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுக பொறுப்பேற்றவுடன் 2022-ம் ஆண்டு உதயநிதியை அமைச்சரவைக்குள் கொண்டுவந்து பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதேபோல், இப்போது அமைச்சரவையில் இலாகா மாற்றங்கள் நடக்கலாம். இதை உறுதி செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி ’மாற்றம் இருக்கும்... ஏமாற்றம் இருக்காது’ என முதல்வர் ஸ்டாலின் கூறியதைக் கவனிக்க வேண்டும்.

மேலும், டெல்லி சென்றுவிட்டு முதல்வர் சென்னைக்கு திரும்பியதும் மாற்றம் குறித்து முடிவெடுக்கப்படும். ஆனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்படுமா என்பது தெரியவில்லை.

தற்போது விசாரணை நடக்கும் வேளையில் பிணைக் கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டால் அது திமுக மீது மேலும் விமர்சனத்தை அதிகரிக்கும். அதனால், அந்த முடிவை முதல்வர் எடுப்பாரா என்னும் கேள்வியும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. எனினும், திமுக பவள விழா முடிந்ததும் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அறிவிப்பு வாயிலாக வெளியாகும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x