Published : 27 Sep 2024 06:48 PM
Last Updated : 27 Sep 2024 06:48 PM

சென்னையில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை, சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகளில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து (kneeling) பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இப்பேருந்துகள் பிராட்வே - கோவளம், கோயம்பேடு - கிளாம்பாக்கம், திருவொற்றியூர் - பூந்தமல்லி உள்ளிட்ட 17 வழித் தடங்களில் வலம் வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 66 புதிய தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பேருந்துகள் அம்பத்தூர் தொழிற்பேட்டை - வேளச்சேரி, தாம்பரம் - செங்குன்றம், கோயம்பேடு - அண்ணா சதுக்கம் உள்ளிட்ட 11 வழித் தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x