Published : 27 Sep 2024 05:32 PM
Last Updated : 27 Sep 2024 05:32 PM

விவசாயிகளின் சொத்துகளை அபகரிக்கும் தனியார் வங்கிகளை கண்டித்து ரிசர்வ் வங்கி வாசலில் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

கும்பகோணம்: விவசாயிகளின் சொத்துகளை அபகரிக்கும் தனியார் வங்கிகளை கண்டித்து ரிசர்வ் பேங்க் வாசலில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

பாபநாசம் வட்டம் கரூப்பூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.நிழல்தாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.டி.ஆர்.செந்தில்குமார் வரவேற்றார். இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "காவிரி டெல்டாவில் சிப்காட் அமைப்பதற்கு நிலங்கள் விவசாயிகள் ஒப்புதலின்றி கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சில தனியார் கார்ப்பரேட் வங்கிகள் விளை நிலங்களையும், விவசாயிகளின் சொத்துகளையும் அபகரிக்கும் உள் நோக்கோடு சட்டவிரோதமாக வசூல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இதைக் கண்டிக்கும் வகையில், ரிசர்வ் பேங்க் வாசலில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கரும்பு விவசாயிகளை மோசடி செய்த நிர்வாகம் மீது சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாய அமைப்புகள் சார்பில், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம்.

எதிர்க்கட்சியாக திமுக, இருந்தபோது விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டு, அதிகாரம் கிடைத்த பிறகு ஆலையையே விலைக்கு வாங்கிய அதிகாரவர்கத்திற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயங்குகிறது. இனியும் இந்த நிலை நீடித்தால் இதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x