Last Updated : 27 Sep, 2024 05:30 PM

 

Published : 27 Sep 2024 05:30 PM
Last Updated : 27 Sep 2024 05:30 PM

கொட்டாரம் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து 5 கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்ப போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்.

நாகர்கோவில்: கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மன்ற கூட்டத்தை புறக்கணித்து துணைத் தலைவர் உட்பட 5 கவுன்சிலர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டாரம் பேரூராட்சி மன்றக் கூட்டம் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செல்வக்கனி தலைமையில் கூட்டம் தொடங்கிய, சிறிது நேரத்தில் கூட்டத்தை புறக்கணித்த பேரூராட்சி துணைத் தலைவர் விமலா உட்பட 5 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளி நபர்கள் எழுதித் தரும் தீர்மானங்களின்படி தீர்மான நோட்டில் திருத்தம் செய்வதை நிறுத்த வேண்டும். மன்றம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் ஒப்பந்ததாரரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே பணிகள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு நடைபெறும் பணிகளை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் குழாய் பழுது என மாதம் தோறும் ஒரே ஒரு ஒப்பந்ததாரர் பல லட்சங்கள் மக்கள் வரிப்பணம் சுருட்டுவதை தவிர்க்க, குடிநீர் குழாய் பழுதுகளை பார்க்க பேரூராட்சி மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

முறையான அனுமதி பெறாமல் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய இளநிலை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, பொது சுகாதார வசதிகள் அனைத்து வார்டுகளுக்கும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் . திடக்கழிவு ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறும் தூய்மைப் பணிகளை அனைத்து வார்டுகளுக்கும் முறையே நடைபெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்தில், துணைத் தலைவருடன் சேர்ந்து கவுன்சிலர்கள் பொன்முடி, தங்ககுமார், ரெத்தினம், சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு நிலவியது. உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x