Last Updated : 27 Sep, 2024 04:35 PM

 

Published : 27 Sep 2024 04:35 PM
Last Updated : 27 Sep 2024 04:35 PM

புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை ஒருமுறை தளர்வு அடிப்படையில் முறைப்படுத்த அரசு முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை ஒருமுறை தளர்வு அடிப்படையில் முறைப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.400 கோடி வரை வருவாய் கிடைக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் கடந்த 2017ல் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குப்படுத்துவதே இச்சட்டத்தின் நோக்கம். இச்சட்டத்தின் படி, மனைகளாக பிரிக்க அனைத்து ரியல் எஸ்டேட் திட்டங்களையும் ‘ரெரா’வில் (ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்) பதிவு செய்ய இச்சட்டம் வலியுறுத்தியது. இச்சட்டம் அமலான போது கட்டுமான வேலைகள் நடைபெற்ற பல கட்டிடங்கள் காலக்கெடுவுக்குள் ‘ரெரா’வில் பதிவு செய்யவில்லை.

புதிய சட்டத்தொன் விதிமுறைகளால் பல கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ‘ரெரா’வில் பதிவு செய்யாத நிலை ஏற்பட்டது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரமற்ற கட்டிடங்களை ஒருமுறை தளர்வு என்ற அடிப்படையில் முறைப்படுத்தும் முறையை அறிவித்தனர். அதேபோன்று புதுச்சேரி அரசும் திட்டமொன்றை தற்போது அறிவித்துள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, "ஒருமுறை தளர்வு என்ற முடிவின்படி, அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் மற்றும் கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தப்பட உள்ளன. இது குறித்து பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை, ஆட்சேபணைகளை 30 நாட்களுக்குள் தலைமை நகரமைப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம். அதேபோல் நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையிலும் தெரிவிக்கலாம். கட்டிடங்களை முறைப் படுத்த விரும்புவோர் தேவையான சான்றுகள், கட்டணம் செலுத்திய ரசீதுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சாதாரண கட்டிடங்களுக்கு ரூ.5 ஆயிரம், பிற கட்டிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் என திரும்பப் பெற இயலாத கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் கட்டிட வடிவமைப்பு, கட்டுமானங்களின் எண்ணிக்கை பார்க்கிங் திட்டம் உள்ளிட்டவற்றையும் இணைக்க வேண்டும். திட்ட ஆணையக் குழுவானது விண்ணப்பத்தின் படி கட்டிடங்கள் குறைந்தப்பட்ச பாதுகாப்புடன் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.

குறிப்பாக, மேனிலை மின் இணைப்புகள், சாலையின் குறைந்தப்பட்ச அகலம், வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு வசதி, தீயில் இருந்து தப்பிக்கும் படிக்கட்டுகள், லிஃப்ட் வசதி, கழிவுகளை அகற்றும் ஏற்பாடு ஆகியவை கட்டிடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும். இதில் விதிமீறல் ஏதும் இருந்தால் கட்டிடங்கள் முறைப்படுத்தலில் பரிசீலிக்கப்படாது" என்று அதிகாரிகள் கூறினர்.

இதுதொடர்பாக அரசின் மேல்மட்ட வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஒரு முறை முறைப்படுத்துதல் திட்டத்தில் அரசுக்கு ரூ.400 கோடி வரை வருவாய் கிடைக்கும். சாதாரண குடியிருப்பு கட்டிடத்துக்கு விண்ணப்பிப்போர் முறைப்படுத்துதல் கட்டணமாக சதுர மீட்டருக்கு ரூ.750 செலுத்த வேண்டும். சிறப்பு கட்டிடங்களுக்கு முறைப்படுத்தல் கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.1,000 ஆகவும், பல மாடி கட்டிடங்களுக்கு சதுர மீட்டருக்கு ரூ.1,500ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு 4 பிராந்தியங்களுக்கும் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்படும்" என்றனர்.

இதுகுறித்து பில்டர்கள் தரப்பில் கூறுகையில், "ஏராளமான கட்டிடங்கள் உரிமையாளர்களுக்கு தரப்படாமல் இருந்தன. தற்போது அரசின் இம்முடிவால் வாங்குவோர் தங்கள் சொத்தை உடமையாக்கவும், கட்டிடங்களைக் கட்டுவோர் தங்கள் கட்டிடங்களை முறைப்படி பதிவு செய்யவும் முடியும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மொத்தத்தில் இது வரவேற்கத்தக்கது" என்று பில்டர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x