Published : 27 Sep 2024 04:16 PM
Last Updated : 27 Sep 2024 04:16 PM
சென்னை: மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய வழக்கில், போலீஸார் பதிலளிக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிர்வாகியான மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக சைதாப்பேட்டை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த செப்.7-ம் தேதியன்று கைது செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை என்றும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், எனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. எனது முழு பேச்சையும் கேட்காமல் எனக்கு எதிராக போலீஸார் பொய் வழக்கினை பதிவு செய்துள்ளனர்.
எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானேன். போலீஸார் காவலில் எடுத்து விசாரித்த போதும் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். எனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து இந்த மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி வரும் அக்.3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT